மெயினருவி, பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி : மேற்குத்தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி மெயினருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

குற்றாலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று பகல் முழுவதும் வெயில் இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட நகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை எதுவும் இல்லாத நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக காலை 11 மணி முதல் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி போலீசார் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகிய 3 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். மாலை 3 மணிக்கு ஐந்தருவியில் மட்டும் தண்ணீர் வரத்து கட்டுக்குள் வந்ததால், ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் மெயினருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் மாலை 6 மணி வரை தடை நீடித்தது.

சுற்றுலாப் பயணிகள் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. திடீர் தடையால் வெளியூர்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் மெயினருவி மற்றும் பழைய குற்றால அருவி ஆகியவற்றில் குளிக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். புலியருவியில் நேற்று முழுவதும் தடை விதிக்கப்படவில்லை.

Related Stories: