கந்துவட்டி செயலிகளின் பின்னணி பற்றி விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை:  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆன்லைன் செயலி கந்து வட்டி நிறுவனங்களின் பின்னணி தொடர்பாக வெளியாகியுள்ள முதல்கட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாகவும், அச்சமூட்டுபவையாகவும் உள்ளன.

இந்தியாவில் இப்போது செயல்பாட்டில் உள்ள 25க்கும் மேற்பட்ட கந்துவட்டி செயலிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு ₹300 கோடிக்கும் கூடுதலான தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருப்பதும், இவற்றில் பெரும்பான்மையான செயலிகளை ஒரே நிறுவனம் பல்வேறு பெயர்களில் நடத்துவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவை முதற்கட்ட செய்திகள் தான். இவற்றை விட பல மடங்கு  செயலிகள் பயன்பாட்டில் இருக்கவும்,  பல மடங்கு தொகை கந்துவட்டிக்கு விடப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

அதேபோல், டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்கள் தனிநபர்களைத் தற்கொலைக்கு தூண்டுவதுடன் மட்டும் பிரச்சினை நின்றுவிடுவதில்லை. கந்துவட்டி செயலிகள் மூலம் தனிநபர்கள் குறித்த அனைத்து தகவல்களும் திருடப்படுகின்றன.  இத்தகைய சூழலில் அவற்றை விட மோசமான கந்துவட்டி செயலிகளை அனுமதிப்பது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.எனவே, இந்தியாவில் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும், கந்துவட்டி செயலிகளை தடை செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக டிஜிட்டல் கந்துவட்டி நிறுவனங்களின் பின்னணி, நோக்கம், அவற்றுக்கு துணையாக இருப்பவர்கள் குறித்து விரிவான விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: