வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவசாயிகளுடன் இன்று 7ம் சுற்று பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்வது குறித்து விவசாயிகளுடன் மத்திய அரசு 7ம் சுற்று பேச்சுவார்த்தையை இன்று நடத்த உள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், கடந்த 30ம் தேதி 6ம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தது. அதில் விவசாயிகளின் 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. இன்னும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, குறைந்தபட்ச உத்தரவாத விலை நீட்டிப்பதை சட்டப்பூர்வமாக்குவது ஆகிய 2 முக்கிய கோரிக்கைகள் மட்டுமே மீதமுள்ளன.

இவை குறித்து 40 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் டெல்லியில் மத்திய அரசு இன்று 7ம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த உள்ளது. மதியம் 2 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கப்பட உள்ளது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், தங்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக ஏற்கனவே விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதன்படி, குடியரசு தினமான வரும் 26ம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தவும் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கொட்டும் மழையிலும் நேற்று 39ம் நாள் போராட்டம் நீடித்தது. டெல்லியில் பெய்து வரும் கனமழையால் விவசாயிகள் கடும் சிரமமடைந்துள்ளனர். போராட்ட களத்தில் டிராக்டர், லாரிகளை இருப்பிடமாக மாற்றி உள்ளனர்.

* நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும்

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஒரு ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் உணர்வுகளை புறக்கணிக்கும் எந்த அரசும், அவற்றின் தலைவர்களும் நீண்ட காலம் ஆட்சி செய்ய முடியாது. செல்வாக்கை பயன்படுத்தி எளிதாக பணியை முடிப்பது என்ற மத்திய அரசின் கொள்கைக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒருபோதும் தலைவணங்க மாட்டார்கள். பிரதமர் மோடி அரசானது தனது அதிகாரத்தின் ஆணவத்தை விட்டுவிட்டு குளிர் மற்றும் மழையில் இறந்து கொண்டு இருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 3 கறுப்பு வேளாண் சட்டங்களை நிபந்தனையின்றி வாபஸ் பெற வேண்டும். இது தான் ராஜதர்மம். உயிரிழந்த விவசாயிகளுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகும்’’ என்றார்.

* ராகுல் காந்தி கண்டனம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், “இந்த நாடானது ஆங்கிலேயர்களுக்கு எதிராக மகாத்மா காந்தி நடத்திய சத்தியாகிரகத்தை போன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொள்கிறது. அப்போது ஆங்கிலேயர்கள் கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். இப்போது மோடியும் அவர்களது நண்பர்களும் அதுபோன்று நடந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு விவசாயியும் சத்தியாகிரஹி. அவர்கள் தங்களது உரிமையை திரும்ப பெறுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: