9 மாதங்களாகியும் திறக்கப்படாத தலையணை..! சிவபுரம் நீரோடையில் குவியும் சுற்றுலா பயணிகள்: களக்காட்டில் களைகட்டும் புது டூரிஸ்ட் ஸ்பாட்

களக்காடு: களக்காடு தலையணை 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் புதிய சுற்றுலா மையமாக மாறிவரும் சிவபுரம் நீரோடையில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள தலையணையில் மாசின்றி ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர். ஆனால், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட தலையணை இன்னும் திறக்கப்படவில்லை. அத்துடன்  சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது 2ம் கட்டமாக உருமாறிய கொரோனா பரவி வருவதாக வெளியான தகவலால், வனவிலங்குகளுக்கு தொற்று ஏற்படுவதை தடுக்க தலையணையை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள் களக்காடு தலையணைக்கு மாற்றாக அருகேயுள்ள சிவபுரம் கிராமத்தில் உள்ள நீரோடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். தலையணைக்கு அருகே மலையடிவாரத்தில் நாங்குநேரியான் கால்வாய், சீவலப்பேரியான் கால்வாய், பச்சையாறு ஆகிய 3 நீரோடைகளும் வட்டமிட்டு ஓடும் இயற்கை எழில்சூழ்ந்த சிவபுரம் கிராமம், எப்போதும் குளிர்ந்த சீதோஷ்ணத்துடன் காணப்படுகிறது. சுற்றிலும் பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் வயல்வெளிகளும், பச்சைப்பட்டு உடுத்தியது போல பசுமையுடன் கண்களுக்கு விருந்தளிக்கும் வனப்பகுதியும் சுற்றுலா பயணிகளை சுண்டி இழுக்கின்றன. இதனால் சிவபுரத்தில் தினமும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். களக்காடு தலையணை ரோட்டில், தலையணைக்கு முன்பாக பிரிந்து செல்லும் தார் சாலையில் கால்வாய் கரை வழியாக சென்றால் சிவபுரத்தை அடைந்துவிடலாம்.

வேன், கார்களில் நண்பர்கள், குடும்பத்தினருடன்  சுற்றுலா வருவோர் அங்குள்ள நீரோடைகளில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். சனி, ஞாயிறு மட்டுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் சிவபுரத்தில் வெளியூர் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. தலையணை போலவே இங்கு ஓடும் தண்ணீரும் அதிக குளுமையுடன் உள்ளது. மூலிகைகளை தழுவியபடி ஓடி வரும் நீரோடைகளில் கால் பதித்ததும் உச்சந்தலை வரை குளிர்ச்சி தாக்குகிறது. இதில் குளிக்கும் போது, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். பொங்கல் விடுமுறை நெருங்கி வருவதை அடுத்து சிவபுரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது பொதுமக்கள் கூட்டத்தால் புது டூரிஸ்ட் ஸ்பார்ட் ஆன சிவப்புரம் களை கட்ட தொடங்கி உள்ளது. அத்துடன் அங்கு புதுப்புது கடைகளும் முளைத்து வருகின்றன.

Related Stories: