புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள்; குமரியில் கடற்கரை, சாலைகள் வெறிச்சோடின: ஆண்டின் முதல் சூரிய உதயம் காண வந்தவர்கள் ஏமாற்றம்

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகள், கடற்கரைகள் வெறிச்சோடின. இன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரிய உதயத்தை காண வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 2021 ம் ஆண்டு பிறந்துள்ளது. நாடு முழுவதும் புத்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தன. குறிப்பாக 31ம் தேதி நள்ளிரவு மற்றும் 1ம் தேதி ஆகிய இரு நாட்களும் கடற்கரைகளில் மக்கள் திரள தடை விதிக்கப்பட்டது.

மேலும் 31ம் தேதி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சாலைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. குமரி மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இதையடுத்து புத்தாண்டு கொண்டாட கன்னியாகுமரியில் குவிந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் லாட்ஜுகளில் முடங்கினர்.

மேலும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட வெளியே வருவதை தடுக்கவும், இளைஞர்கள் கூடுவதை தடுக்கவும் கன்னியாகுமரி நுழைவுவாயில் பகுதிகள் உள்பட 8 இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் லாட்ஜிகளில் புத்தாண்டு கலை நிகழ்ச்சி நடத்தவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று இரவு கன்னியாகுமரி களையிழந்து காணப்பட்டது. கடற்கரையும் வெறிச்சோடி கிடந்தது. கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் புத்தாண்டின் முதல் சூரிய உதயம் காண இன்று அதிகாலை 5 மணிக்கு உள்ளூர் மற்றும் லாட்ஜுகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் திரண்டனர்.

ஆனால் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து கடற்கரைக்கு செல்லாத வண்ணம் அவர்களை தடுத்து நிறுத்தி அனுப்பினர். கொரோனா காரணமாக விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவுகளை கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினர். இதனால்  புத்தாண்டின் முதல் சூரிய உதயம் காண முடியாமல் பரிதவித்தபடி ஏமாற்றத்துடன் சென்றனர். இதே போல் குமரி மாவட்டம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. வழக்கமாக நாகர்கோவிலில் வடசேரி, வெட்டூர்ணிமடம், பார்வதிபுரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் இளைஞர்கள், வாலிபர்கள் திரண்டு புத்தாண்டு கேக் வெட்டுவது, உற்சாக நடனம் என நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டி இருக்கும்.

ஆனால் நேற்று இரவு 8 மணியில் இருந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலைகளில் நின்றவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அனுப்பி வைத்தனர். எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் அதிரடிப்படையினர் ரோந்து வந்தனர். பார்வதிபுரம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் நடத்தப்படலாம் என்ற தகவலால், அங்கு போலீசார் கண்காணித்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டப்படி பைக்கில் வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இன்று காலை முதல் சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளை, சங்குதுறை மற்றும் முட்டம் கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலைகள் மற்றும் கடற்கரைகளில் மக்கள் திரள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

Related Stories: