கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதுப்பால இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்: திருவானைக்கோவில் வழியாக சாலை போக்குவரத்து நிறுத்தம்

திருக்காட்டுப்பள்ளி: கல்லணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தஞ்சை- திருச்சி மாவட்டங்களை இணைக்கு வகையில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால நிறைவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கல்லணை- திருவானைகோவில் வழியில் சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகால்சோழனால் உலகையே வியக்கவைக்கும் வகையில் கட்டப்பட்டது கல்லணை. கால்ஹோகெஸ்ட் என்ற பிரிட்டிஷ் அதிகாரி, சிதைந்து போன ஷட்டர்களை சரி செய்து பராமரித்தார். பின்னர் வந்த பொறியாளர் ஆர்தர்காட்டன் கரிகாலன் அமைத்த கட்டுமானத்தின் மேலேயே 1839ம் ஆண்டு உறுதியான பாலங்களை அமைத்து ஷட்டர்களையும் பொருத்தி தற்போதுள்ள வடிவத்துக்கு கொண்டு வந்தார்.

இது காவிரியை கல்லணை காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், உள்ளாறு என்று நான்காக பிரிக்கிறது. இதில் முதல் மூன்றும் விவசாயத்துக்கு பாசனம் அளிப்பவை. உள்ளாறு வழியாக கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க முடியும். 30 ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொள்ளிடம் வடிகால் ஆறாகும். கல்லணை பாலம் கட்டப்பட்டு ஏறக்குறைய 200 ஆண்டுகள் கடந்த நிலையில் பழமையான இப்பாலத்தின்மேல் கனரக வாகனங்கள், லாரிகள், பயணிகள் பேருந்து செல்ல அனுமதி கிடையாது. திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருச்சி செல்லும் மக்கள், கல்லணை பாலத்தின் கிழக்கு பகுதியில் இறங்கி கொள்ளிடம் பாலத்தை நடந்து கடந்து மேற்கு பகுதியில் பேருந்தை பிடித்து திருவானைக்கோவில் வழியாக திருச்சி செல்ல வேண்டும்.

மேலும் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள் லால்குடி சுற்றிவர வேண்டும். இதை எளிமையாக்க கல்லணை கொள்ளிடம் ஆற்றில் போக்குவரத்துக்கு என்று புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டுமென அரசிடம் நீண்ட காலமாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் 2013ம் ஆண்டு டிசம்பவர் 13ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தஞ்சை மாவட்டம் கல்லணை சாலை- திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் சாலைகளை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டத்தை அறிவித்து நிதியாக ரூ.67 கோடியை ஒதுக்கீடு செய்தார். பாலத்தின் நீளம் 1,052 மீட்டராகும்.

அகலம் 12.90 மீட்டர், வாகனங்கள் செல்லும் பாதையின் அகலம் 10.50 மீட்டர், இருபுறமும் நடைபாதை அகலம் 2.40 மீட்டராகும். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 42 மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ள 25 தூண்கள் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தூணும் 2 மீட்டர் விட்டம் உள்ளவையாகும். ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் முடிவடைந்தபோதும் மேற்கு பகுதியில் சாலைகளை இணைக்கும் பணிகள் நில எடுப்பு செய்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் தள்ளி போடப்பட்டு வந்தது. தற்போது அவை முடிவடைந்து கடந்த 27ம் தேதி முதல் பணிகள் துவக்கப்பட்டு முழுவீச்சில் நடக்கிறது.

இதனால் கல்லணை- திருவானைக்கோவில் வழியில் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் பொங்கல் திருநாளுக்குள் முடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டால் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் மக்களுக்கு பயண தூரமும், பயண நேரமும் குறையும்.

Related Stories: