அஸ்திவார இடத்துக்கு கீழே நதி நீரோட்டம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதில் திடீர் சிக்கல்: உதவி செய்யும்படி ஐஐடி நிபுணர்களுக்கு அழைப்பு

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்துக்கு கீழே சரயு ஆற்றின் நீரோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால், கோயிலை கட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது.  உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில், ராமர் கோயில் கட்டப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். தற்போது, கோயில் மாதிரி உருவாக்கப்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், ராமர் கோயிலை கட்டுவதற்காக தீர்மானிக்கப்பட்ட இடத்துக்கு அடியில், அருகில் உள்ள சரயு நதியின் நீரோட்டம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கோயிலை கட்டுவதற்கு பாதுகாப்பாக இருக்காது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமரின் முன்னாள் செயலாளர் நிரூபேந்திர மிஸ்ரா தலைமையில், கோயிலின் கட்டுமான குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கோயிலை கட்டும் பகுதியில் சரயு நதியின் நீரோட்டம் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நீரோட்டம் காரணமாக, தற்போது திட்டமிட்டப்பட முறையில் கோயிலுக்கான அஸ்திவாரத்தை அமைக்க முடியாது. இதனால், வலுவான அஸ்திவாரம் அமைப்பதற்கான சிறந்த வடிவமைப்புகளை பரிந்துரை செய்யும்படி, நாட்டில் உள்ள அனைத்து ஐஐடி.களின் நிபுணர்களுக்கும் ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Stories: