மாநகராட்சி கூட்டத்தில் ரகளை: எதிர்க்கட்சி தலைவர் 15 நாள் சஸ்பென்ட்: கிழக்கு டெல்லி மேயர் அதிரடி

புதுடெல்லி: பேரவை கூட்டத்தை அமைதியாக நடத்த விடாமல் ரகளையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் மற்றும் ஒரு கவுன்சிலரை 15 நாள் சஸ்பென்ட் செய்து கிழக்கு டெல்லி மாநகராட்சி (இடிஎம்சி) மேயர் நிர்மல் ஜெயின் அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். கிழக்கு டெல்லி மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. பாஜ கவுன்சிலர்கள் பெரும்பான்மை உள்ள அவையில், கூட்ட நடவடிக்கை தொடங்கியதும், இரங்கல் செய்தியை அவை தலவைர் ப்ரவேஷ் சர்மா வாசித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவரான ஆம் ஆத்மி கட்சியின் மனோஜ் குமார் தியாகியும், உடன் அக்கட்சி கவுன்சிலர்களும் அவை நடுவே கூடி அமளியில் ஈடுபட்டனர் என தெரிவித்த மேயர் நிர்மல் ஜெயின், இரங்கல் செய்திக்கு நடுவே இப்படி நடந்து கொள்வது அவைக்கு கண்ணியக்குறைவு எனக் கூறியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என சாடினார்.

மேலும், இடிஎம்சி மக்கள் நலனை முன்னிட்டு சொத்து வரி தள்ளுபடி அறிவிப்பை உடனே தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என விடாப்பிடியாக அவையில் வீண் ரகளையில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அவையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இடையே, சர்மாவிடம் இருந்து இரங்கல் அறிக்கையை பறித்து, கிழித்து எறிந்தார் தியாகி. அது மட்டுமன்றி உச்சகட்ட அதிர்ச்சியாக மேயர் இருக்கையை நெருங்கி மற்றொரு கவுன்சிலர் கீதா ராவத் பலத்த குரல் எழுப்பி அவையில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். அவை நடவடிக்கை குறித்த நிகழ்ச்சி நிரல் அறிக்கையையும் தியாகி கிழித்து வீசினார். எனவே, அவைக்கு குந்தகம் விளைவித்த எதிர்க்கட்சி தலைவர் மனோஜ் குமார் தியாகி மற்றும் கவுன்சிலர் மோகிணி ஜீன்வால் ஆகியோரை 15 நாள் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டு உள்ளேன் என மேயர் நிர்மல் ஜெயின் தெரிவித்தார்.

Related Stories: