வால்பாறையில் சத்துணவு கூடத்தை உடைத்து சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறை: வால்பாறையில் சத்துணவு கூடத்தை உடைத்து காட்டு யானைகள் சூறையாடின. கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்து உள்ள அப்பர்பாரளை எஸ்டேட்டில் இன்று அதிகாலை வனத்திலிருந்து வெளியேறி புகுந்த 7 காட்டு யானைகள், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தின் கதவை உடைத்து, உள்ளே புகுந்தன. அங்கு மாணவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு உள்ளது. யானைகள் அட்டகாசத்தால் அங்கிருந்த சமையல் பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. மேலும் பள்ளி வளாகத்தின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரி, 3 கார்களையும் சேதப்படுத்தி உள்ளது.

இதில் வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்த யானைகள், பக்கவாட்டில் தந்தத்தால் குத்தியும், முட்டியும் உள்ளது. இதனால் வாகனங்கள் சேதம் அடைந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானைகளை அருகில் உள்ள வனத்துக்குள் விரட்டி அடித்தனர். யானைகள் தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்திருப்பதை கண்ட அதன் உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். வாகனங்களை தங்கள் வீடுகள் வரை கொண்டு செல்ல அனுமதிக்கவேண்டும் என தோட்ட உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: