கேப்டன் ரகானே - ஜடேஜா உறுதியான ஆட்டம் முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், கேப்டன் ரகானே - ஜடேஜா ஜோடியின் உறுதியான ஆட்டத்தால், இந்தியா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லாபுஷேன் 48, டிராவிஸ் ஹெட் 38, மேத்யூ வேடு 30 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 4, அஷ்வின் 3, சிராஜ் 2, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது. மயாங்க் அகர்வால் டக் அவுட்டானார். கில் 28 ரன், புஜாரா 7 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. கில் 45 ரன் (65 பந்து, 8 பவுண்டரி), புஜாரா 17 ரன் எடுத்து கம்மின்ஸ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பெய்ன் வசம் பிடிபட்டனர். ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன் என்ற நிலையில் இருந்து, 64 ரன்னுக்கு 3 விக்கெட் என இந்திய அணி திடீர் சரிவை சந்தித்த நிலையில், கேப்டன் ரகானே - ஹனுமா விஹாரி இணைந்து 4வது விக்கெட்டுக்கு 52 ரன் சேர்த்தனர்.

விஹாரி 21 ரன் எடுத்து லயன் சுழலில் ஸ்மித் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ரகானேவுடன் இளம் வீரர் ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 5வது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்தனர். ரிஷப் பன்ட் 29 ரன் (40 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஸ்டார்க் வேகத்தில் பெய்ன் வசம் பிடிபட்டார். இந்தியா 59.1 ஓவரில் 173 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து சற்றே திணறிய நிலையில், ரஹானே - ஜடேஜா இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களைப் பிரிக்க ஆஸி. பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அபாரமாக விளையாடிய கேப்டன் ரஹானே சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 12வது சதமாகும். மெல்போர்ன் மைதானத்தில் ரகானே தனது 2வது சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2014ல் இங்கு விளையாடியபோது 147 ரன் விளாசி இருந்தார். மழை காரணமாக 2ம் நாள் ஆட்டம் சற்று முன்னதாகவே முடிவுக்கு வந்த நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் (91.3 ஓவர்) குவித்துள்ளது. ரகானே 104 ரன் (200 பந்து, 12 பவுண்டரி), ஜடேஜா 40 ரன்னுடன் (104 பந்து, 1 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 5 விக்கெட் இருக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 82 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று பரபரப்பான 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Stories: