இந்தாண்டு பிப்ரவரி முதல் காலாவதியான ஆர்சி, எப்சி, ஓட்டுனர் உரிமம் 2021, மார்ச் 31 வரை செல்லும்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: இந்தாண்டு பிப்ரவரியுடன் காலாவதியான மோட்டார் வாகனங்களின் ஆர்சி, எப்சி மற்றும் ஓட்டுனர் உரிமங்களின் காலத்தை அடுத்தாண்டு மார்ச் 31 வரையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நீட்டித்துள்ளது. பஸ், லாரி, கார்கள் உள்ளிட்ட சாதாரண மற்றும் வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு ஆர்சி புத்தகம், எப்சி சான்றுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை இருந்தால்தான் வாகனங்களை இயக்க முடியும். இல்லை என்றால், அதிகாரிகளின் நடவடிக்கையில் சிக்கி வாகன பறிமுதல், அபராதம் போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஓராண்டாக இந்த ஆவணங்களை புதுப்பிக்க முடியாத காரணத்தால், நாடு முழுவதும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, லாரிகள், பள்ளி வாகனங்கள், டாக்சிகள் போன்றவை இவற்றில் முக்கியமானவை. இந்நிலையில், இந்தாண்டு பிப்ரவரி முதல் காலாவதியான இதுபோன்ற ஆவணங்களும், ஓட்டுனர் உரிமங்களும் 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை செல்லும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அது சுற்றறிக்கை அனுப்பி, இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, எப்சி, ஓட்டுனர் உரிமம் காலாவதியான வாகன உரிமையாளர்கள், மக்களும் அடுத்தாண்டு மார்ச் வரை கவலையின்றி வாகனங்களை இயக்க முடியும்.  

Related Stories: