ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவாதசியையொட்டி நேற்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் ஆன்லைனில் ரூ.300 டிக்கெட் பக்தர்களும், இலவச டிக்கெட் பெற்ற உள்ளூர் பக்தர்களும் சொர்க்கவாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

துவாதசியான நேற்றும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் துவாதசியொட்டி கோயில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதில் கொரோனா பரவல் காரணமாக அர்ச்சகர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என 2 நாட்கள் மட்டும்தான் சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆனால் இந்தாண்டு முதல்முறையாக 10 நாட்கள் (வரும் 3ம் தேதி வரை) சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

ரூ.4.39 கோடி காணிக்கை

வைகுண்ட ஏகாதசியான நேற்று முன்தினம் 42,825 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதில், ரூ.4.39 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: