சேலத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை கோலமாவு டன்னுக்கு 300 அதிகரிப்பு: கலர்பொடியை வாங்கிச் செல்வதில் ஆர்வம்

சேலம்: கோலமாவு டன்னுக்கு 300 வரை அதிகரித்து 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சேலத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து வந்து கலர்பொடிகளை  மொத்தமாக வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை நெருங்கி வருகிறது. இப்பண்டிகை காலத்தையொட்டி, தங்களின் வீடுகளின் முன்பு பெண்கள் அழகாக  கலர் கோலமிட்டு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கோலமாவு விற்பனை  அனைத்து மாவட்டங்களிலும் களை கட்டியிருக்கும். தற்காலிக கோலப்பொடி கடைகளும் பல்வேறு இடங்களில் வைக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நெந்திமேட்டில் கல் மாவு அரைக்கும் ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளுக்கு ஆந்திராவில் இருந்து கோலமாவு  தயாரிப்பதற்காக வெள்ளை கல்லை, லாரிகளில் லோடாக கொண்டு வந்து அரைத்து விற்கின்றனர். இந்த ஆலைகளில் டன் கணக்கில் வெள்ளை நிற  கோலமாவு விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு டன் வெள்ளை நிற கோலமாவு 3,600 முதல் 3800 வரை விற்கப்பட்டது. இது நடப்பாண்டு 300  அதிகரித்து, 3,900 முதல் 4000 வரை விற்கப்படுகிறது. இதனை வாங்கிச்செல்லும் மொத்த வியாபாரிகள், 50 கிலோ மூட்டைகளாக கட்டி வெள்ளை  கோலப்பொடி மற்றும் பல்வேறு வண்ணங்களில் கலர்பொடிகளை தயாரித்தும் விற்கின்றனர்.

சேலம் குகை பகுதியில், இத்தகைய மொத்த வியாபார கடைகள் இருக்கின்றன. இந்த கடைகளில் தற்போது கோலமாவு விற்பனை களை  கட்டியுள்ளது. தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள், மொத்தமாக வெள்ளை நிற கோலமாவு மற்றும் 24  வண்ணங்களிலான கலர் பொடிகளை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர். 50 கிலோ வெள்ளை கோலமாவு மூட்டை ₹280க்கு  விற்கப்படுகிறது. இதுவே சில்லரைக்கு 1.5 கிலோ 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. கலப்பொடிகளை பொருத்தளவில் பச்சை, சிவப்பு, மஞ்சள், நீலம், கருநீலம், ரோஸ், கிளிப்பச்சை, கருப்பு உள்ளிட்ட 24 கலர்களில் கோலப்பொடிகளை  தயாரித்து வைத்துள்ளனர். மொத்த வியாபாரத்திற்கு 300 கிராம் எடை கொண்ட கலர்கோலப்பொடி பாக்கெட் 5க்கு விற்கப்படுகிறது. இதுவே  சில்லரைக்கு ஒரு பாக்கெட் 6 என்ற நிலையில் விற்கின்றனர். இங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள், கலர்  கோலப்பொடி பாக்கெட்டுகளை 10 முதல் 15 வரையில் விற்கின்றனர். இதுபற்றி வியாபாரி முருகன் கூறுகையில், “கடந்த ஆண்டு இதே  காலக்கட்டத்தில் கோலப்பொடி விற்பனை அமோகமாக இருந்தது.

ஆனால், நடப்பாண்டு கொரோனாவால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை,  வேலூர், காஞ்சிபுரம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகளவு வியாபாரிகள் வரவில்லை. குறைந்த  அளவிலான மொத்த வியாபாரிகள் தான் வந்து, கோலப்பொடியை வாங்கிச் செல்கின்றனர். அதிலும் கலர் பொடிகளை வாங்கிச் செல்வதில் அதிக  ஆர்வம் காட்டுகின்றனர். காரணம், நகர பகுதிகளில் தற்போது வீட்டு வாசல்களில் பல வண்ணங்களில் பெரிய அளவிலான கோலங்களை போடும்  வழக்கம் வந்துள்ளது. பெண்களும் ஆர்வமாக கோலம் வரைகின்றனர். அதனால், இன்னும் ஒரு வாரத்தில் வியாபாரம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில்  உள்ளோம். இதற்காக அதிகளவு கலர் பொடிகளை தயாரித்து வைத்துள்ளோம். அவை விற்பனையாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது,’’ என்றார்.

Related Stories: