குடியரசு தின விழாவில் பங்கேற்க இங்கி. பிரதமர் இந்தியா வருவார்: வெளியுறவு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவார் என்று வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஜனவரி 26ம்  தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இங்கிலாந்தில் வேகமாக பரவிவரும் உருமாறிய புதியவகை கொரோனா வைரசால்  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை சாத்தியமில்லை என்று தகவல்கள் வெளியாகின.

மேலும் அந்நாட்டில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதனால், போரிஸ் ஜான்சன் இந்தியா வருவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து மத்திய  வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘வருகிற குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை அழைத்தோம். சமீபத்தில்,  அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் இந்தியாவுக்கு வந்தபோது, இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையை உறுதிசெய்தோம். எனவே, வரும் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமரை  வரவேற்க ஆர்வமாக உள்ளோம்’  என்றார்.

Related Stories: