ஆஸி ஓபன் டென்னிஸ்: பெடரர் பங்கேற்கிறார்

மெல்போர்ன்: காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஜர் பெடரர் உட்பட முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளனர். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர்(39)  இந்த ஆண்டு தொடக்கத்தில் 2 அறுவை சிகிச்சை செய்துக் கொண்டார். அதனால் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியிலும் அவர் பங்கேற்வில்லை. எனவே ஓய்வில் இருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு, ‘2021 ஆஸி ஓபன் தள்ளி வைக்கப்பட்டால் பங்கேற்பேன்’  என்று கூறியிருந்தார்.

அதற்கேற்ப ஆஸி ஓபன் ஜன.20ம் தேதிக்கு பதில் பிப்.8ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் துபாயில் தீவிர பயிற்சியில் இருக்கும் பெடரர், ஆஸி ஓபனில் பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச்(செர்பியா), ரபேல் நடால்(ஸ்பெயின், டொமினிக் தீம்(ஆஸ்திரியா, டேனில் மெத்வதேவ்(ரஷ்யா), ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ்), அலெக்சாண்டர் ஜரேவ்(ஜெர்மனி, ஆந்த்ரே ரூப்லேவ்(ரஷ்யா) என முன்னணி வீரர்களும் போட்டியில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதேபோல் நடப்பு சாம்பியன் சோபியா கெனின்(அமெரிக்கா), ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), செரீனா வில்லியம்ஸ்(அமெரிக்கா), நவோமி ஒசாகா(ஜப்பான்) சிமோனா ஹாலேப்(ருமேனியா), எலினா ஸ்விட்டோலினா(உக்ரைன்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு(கனடா), பெட்ரா குவித்தோவா(செக் குடியரசு), கிக்கி பெர்டென்ஸ்(நெதர்லாந்து, ஆர்யனா சபாலென்கா(பெலரஸ்) ஆகிய வீராங்கனைகளும் ஒப்புதல் வழங்கியுள்ளனர். இப்படி பெரும்பான்மையான முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் என 104 பேர்  ஒற்றையர் பிரிவின் பிரதான சுற்றில் களம் காண உள்ளன. இதனை ஆஸி ஓபன் போட்டி இயக்குநர் கிரெய்க் டிலே நேற்று உறுதி செய்தார். தள்ளி வைக்கப்பட்டுள்ள ஆஸி ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டி பிப்.8ம் தேதி முதல் பிப்.21ம் தேதி வரை மெல்போர்ன் நகரில் நடக்கும்.

Related Stories: