இரவு முகாமில் தங்கும் மக்களுக்கு சூடான குடிநீர், டீ சப்ளை: அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தகவல்

புதுடெல்லி: டெல்லி இரவு முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு சூடான குடிநீர், மாலையில் டீ வழங்கப்படுகிறது. மேலும் கழிவறை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.டெல்லியில் வீடில்லா மக்கள் தங்குவதற்காக இரவு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கும் மக்களுக்கு டெல்லி அரசு சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இதை டெல்லி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஐஎஸ்பிடியில் உள்ள முகாம், தந்திரி பார்க் முகாம், கீதா காலனி முகாம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி அவர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது டெல்லியில் வெப்பநிலை 3 டிகிரி அளவுக்கு குறைந்து கடும் பனிச்சூழல் நிலவுவதால், இரவு முகாமில் தங்கும் மக்களுக்கு குளிர் பாதிப்பு இல்லாத வகையில் அதிக வசதிகளை செய்து கொடுக்க அவர் அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். இதுபற்றி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:

இரவு முகாமில் தங்கும் மக்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுப்பதற்காக நான் நேரில் ஆய்வு செய்தேன். அதன்பின் இரவு முகாம்களில் சூடான தண்ணீர், மாலையில் டீ வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் கழிவறை வசதிகளை அதிகரிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். கொரோனாவை முன்னிட்டு சாராய் காலேகான் பகுதியில் புதிய இரவு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100 பேர் தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு தண்ணீர் புகாதவகையில் 60 படுக்கைகளும் மற்றும் தீ விபத்து ஏற்படாதவகையிலும் 25 படுக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இதை நான் திறந்து வைத்தேன். இரவு முகாம்களிலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும். இதுவரை இரவு முகாம்களில் கொரோனா பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை. கொரோனா அறிகுறிகளுடன் அங்கு யாராவது இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் மொகல்லா கிளினிக்கில் சோதனைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். இரவு முகாம்களில் செய்து வைத்துள்ள அனைத்து வசதிகளும் எனக்கு திருப்தி அளிக்கின்றன.

கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இரவு முகாம்களுக்குள் நுழைந்ததும் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படும். மேலும் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

* டெல்லியில் கொரோனாவுக்கு முன்பு 200 இரவு முகாம்கள் இருந்தன.

* தற்போது சமூக விலகலை கடைபிடிக்க வசதியாக இரவு முகாம்களின் எண்ணிக்கை 400ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories: