ரூ.50,000 லஞ்சம் வாங்கிய ஆவின் மேலாளர் கைது

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சொரகொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகையன் (50). விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்து அங்குள்ள பால்பண்ணை கிடங்கில் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.   இதற்காக 1 லிட்டருக்கு ரூ.40 பைசாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவ்வகையில் முருகையனுக்கு கடந்த 2019 ஆகஸ்டு வரை ரூ.1.81 லட்சம் தொகையை வழங்காமல் வேலூர் ஆவின் நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.  

இந்த நிலையில் வேலூர் ஆவின் 2 ஆக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தனியாக இயங்கி வருகிறது. இதையடுத்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் பால் கொள்முதல் மேலாளர் ரவியிடம், சில நாளுக்கு முன்பு முருகையன் ரூ.1.81 லட்சம் நிலுவை தொகையை வழங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர், ரூ.50,000 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து முருகையன், வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய பணத்தை முருகையன், ரவியிடம் நேற்று வழங்கிய போது, மறைந்திருந்த போலீசார் ரவியை கைது ெசய்தனர்.

வேலூரில் இதுவரை ரூ.4.30 கோடி சிக்கியது

வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கலெக்டர் அலுவலகத்தில் முத்திரைதாள் சப் கலெக்டர் தினகரன், ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த அக்டோபர் 13ம் தேதி காட்பாடியில் விஜிலென்ஸ் போலீசார் நடத்திய திடீர் ரெய்டில் மாசுகட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்திடம் ரூ.3.50 கோடி மற்றும் 3.6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை ரூ.4.30 கோடி பணம் மற்றும் 3.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: