பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு: 8 அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் பட்டியல் கொடுத்தார்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீது 97 பக்க ஊழல் புகார்களை அளித்தார். அப்போது அவர்கள் மீது ஊழல் தடுப்புச்சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள பரபரப்பான சூழ்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சந்தித்தார்.

அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா, அமைப்புச் செயலாளர்

ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

1. முதல்வர் பழனிசாமி தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6,133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதல்கட்டமாக வருமானத்துக்கு அதிகமாக ரூ.200.21 கோடிக்கு தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

2. .துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது “காக்னிசென்ட்” கம்பெனி கட்டுமானத்துக்கு அனுமதி பெறுவதற்காக அந்த நிறுவனம் 8 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலரை அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் கொடுத்துள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக அவரது மனைவி மற்றும் அவரது குழந்தைகள் பெயரில் சொத்து சேர்த்துள்ளார். மேலும் தனது சகோதரர்கள் ஓ.ராஜா, ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம், வியாபார கூட்டாளி சுப்புராஜ் ஆகியோர் பெயரில் தேனி பகுதிகளுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். 2011ல் அவரது மனைவி பெயரில் 2 லட்சத்து 42 ஆயிரம் சொத்து இருந்தது என்று வேட்பு மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால், 2016ல் 78 லட்சமாக அதிகரித்து காட்டப்பட்டுள்ளது.

3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து-அதிக விலைக்கு  கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் ெசய்துள்ளார்.

4. மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய்.

5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுகளில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி தர வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால், அவர் தராமல் ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ மட்டுமே கொடுத்து, மீதமுள்ள அரிசியை தனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் பாலிஸ் செய்து வெளிமார்க்கெட்டில் விற்றுள்ளார். இதன் மூலம் ரூ.450 கோடி ஊழல் நடந்துள்ளது.

6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல்  செய்துள்ளார்.

7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மீது  1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார் உள்ளது.

8. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல். இந்த ஊழல் தொடர்பாக வழக்கு பதிய கோரி உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து -மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை ஆளுநர் நிலைநாட்டிட வேண்டும். இந்த புகார்களில் உரிய முகாந்திரம் இருப்பதால் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* நிலக்கரி இறக்குமதி, தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி  மின்சார கணக்கில் ரூ.950.26 கோடி ஊழல்.

* அன்னயோஜனா திட்டத்தில் ரேஷன் அரிசியை பாலீஸ் செய்து வெளி மார்க்கெட்டில் விற்றதில் ரூ.450 கோடி ஊழல்.

* பாரத் நெட் டெண்டரில் ரூ.1950 கோடிக்கு ஊழல்.

* மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

Related Stories: