மாநகராட்சிகளுக்கான நிலுவைத்தொகையை கேட்டு ஆம் ஆத்மி ஆபீஸ் அருகே மேயர்கள் போராட்டம்

புதுடெல்லி: எம்சிடிகளுக்கான நிலுவைத்தொகையை வழங்கக்கேட்டு பாஜ வசம் உள்ள டெல்லியின் மூன்று மாநகராட்சிகளை சேர்ந்த மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பாஜ கட்சியின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆம் ஆத்மி கட்சியின் அலுவலகம் அருகே சத்தியாக்கிர போராட்டத்தை நேற்று தொடங்கினர். டெல்லியிலுள்ள மூன்று மாநகராட்சிகளும் பாஜ வசமே கடந்த 15 ஆண்டுகளாக உள்ளன. ஆனால், கடந்த இரு சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சி அடுத்ததாக மாநகராட்சி தேர்தலை குறிவைத்துள்ளது. இதன் காரணமாக, பாஜவின் நிர்வாகம் பற்றியும், ஊழல்கள் குறித்தும் ஆம் ஆத்மி குற்றச்சாட்டி வருகிறது.

பாஜவும் ஆம் ஆத்மி அரசின் மீது புகார்களை அடுக்கி வருகிறது. இந்த பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக, மூன்று மாநகராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.13,000 கோடியை விடுவிக்கக்கோரி மூன்று மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பாஜ முதல்வர் கெஜ்ரிவால் வீடு முன்பாக அமர்ந்து தொடர்ந்து 13 நாட்கள் வரை போராட்டம் நடத்தி வந்தனர். பின்னர், போராட்டம் நடத்த வேண்டிய இடம், மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் குறித்து டெல்லி போலீசார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்கு பதிலளித்தனர். இதன் தொடர்ச்சியாக, முதல்வர் வீடு முன்பாக நடத்தி வந்த போராட்டத்தை பாஜவின் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள டிடியு மார்க் பகுதியில் போராட்டத்தை தொடங்கினர். இதில் மூன்று மாநகராட்சிகளின் மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பாஜ கட்சியின் டெல்லி மாநில முன்னணிதலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாஜ மாநில தலைவர் அதேஷ் குப்தா கூறுகையில், “கெஜ்ரிவால் அரசு மாநகராட்சிகளுக்கான தனது தார்மீக பொறுப்பை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. எம்சிடிகளுக்கு வழங்க வேண்டிய 13,000 கோடி நிதியை கெஜ்ரிவால் தடுத்து நிறுத்துவதன் மூலம் வளர்ச்சிப் பணிகளை கெஜ்ரிவால் தடுக்கிறார்”என்றார். இந்தபோராட்டத்தில் குப்தா தவிர, பாஜ எதிர்கட்சி தலைவர் ராம்வீர் பிதூரி, வடக்கு மாநகராட்சி மேயர் ஜெய் பிரகாஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Related Stories: