குடகு மாவட்டத்தில் அசம்பாவிதமின்றி நடந்த பஞ்சாயத்து தேர்தல்

குடகு: குடகு மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்துக்கான முதற்கட்ட தேர்தலில் எந்தவிதமான அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் நேற்று மாவட்டம் மற்றும் கிராம பஞ்சாயத்திற்கான முதற்கட்ட தேர்தல் நேற்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. மலை பிரதேசம் என்பதால் காலையில் வாக்காளர்கள் வரத்து குறைவாக இருந்தது. சூரிய உதயமான பின்னர் வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முந்தியடித்து கொண்டு வரிசையில் நின்றனர். சோமாவரபேட்டை கும்பூரு வாக்கு மையத்தில் எம்.எல்.ஏ அப்பச்சு ரஞ்சன் தனது மனைவியுடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.

மடிகேரி மற்றும் சோமாவரபேட்டையில் வாக்கு மையத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஹெப்பாலே கிராம பஞ்சாயத்தில் வாக்களிக்க சென்றவர்களிடம், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக இருவேறு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு, அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து லத்தி ஜார்ஜ் நடத்தி கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கிடையில் பதட்டமான மற்றும் மிகவும் பதட்டமான வாக்கு மையங்களாக குறிப்பிடப்பட்டிருந்த இடங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ் கண்மணி ஜாய் பார்வையிட்டார். இரண்டாம் கட்ட வாக்குபதிவு 27ம் தேதி நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: