முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை குமரி வருகை: அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றுகிறார்

பிரமாண்ட வரவேற்பு ஏற்பாடுகள்

* 2500 போலீஸ் குவிப்பு

அருமனை: அருமனையில் நாளை நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக அவர் நாளை மாலை நாகர்கோவில் வருகிறார். குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கத்தின் 23வது கிறிஸ்துமஸ் விழா, அருமனையில் நாளை (22ம் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். நாளை இரவு 8 மணிக்கு கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை வகிக்கிறார். கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் வரவேற்று பேசுகிறார்.

நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் மற்றும் பேராயர்கள், கிறிஸ்தவ இயக்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். கிறிஸ்துமஸ் கேக் வேட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகிறார். முன்னதாக அருமனை நெடிய சாலை சந்திப்பில் இருந்து 50 கலைக்குழுக்கள் 1000 கலைஞர்கள் பங்கேற்கும் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் மற்றும் முதலமைச்சருக்கு வரவேற்பு ஆகியவை நடக்கிறது. இந்த விழா ஏற்பாடுகள் குறித்து கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் கூறியதாவது: அருமனை கிறிஸ்துமஸ் விழா உலகில் உள்ள கிறிஸ்தவ மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கடந்த 22 வருடங்களாக நடந்து வருகிறது.

23வது ஆண்டு கிறிஸ்துமஸ் விழா, நாளை நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்கு முன் நடந்த விழாக்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ராஜ்யசபா துணை தலைவர் பி.கே.குரியன், நடிகர்கள் சரத்குமார், கலாபவன்மணி, தியாகராஜன், பிரசாந்த், டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங் கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன், ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின்பைலட் உள்பட பல முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பல்ேவறு கலைநிகழ்ச்சிகளுடன் நடக்கும் ஊர்வலமும் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்பம்சம் ஆகும். மதநல்லிணக்க விழாவாக இது நடக்கிறது. இந்த விழாவில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கிறிஸ்துமஸ் விழாவுக்கு வரும் முதலமைச்சரை வரவேற்கும் விதமாக பல்வேறு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரமாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்பதால், விழா நடைபெறும் மைதானம் போலீசின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக, குழித்துறையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருக்கிறது.

3 அடுக்கு பாதுகாப்பு

இந்த விழாவுக்காக நாளை மாலை 3 மணிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். மாலை 5 மணியளவில் நாகர்கோவில் வரும் முதலமைச்சர், கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்குகிறார். அப்போது குமரி மாவட்டத்தில் 7.5 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவ சீட் பெற்ற, குமரி மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 12 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முடிந்து இரவு 8 மணியளவில் காரில் அருமனை புறப்பட்டு செல்கிறார்.

அங்கு கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு கேக் வெட்டி உரையாற்றும் முதலமைச்சர், பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வந்து, திருநெல்வேலி செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு மேற்பார்வையில், எஸ்.பி. பத்ரி நாராயணன் தலைமையில் சுமார் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் வந்துள்ளனர். முதலமைச்சர் தங்கும் அரசு விருந்தினர் மாளிகை, விழா நடைபெறும் மைதானம் மற்றும் முதல்வர் கார் செல்லும் வழிப்பாதைகளில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

அதிமுகவினர் திரளாக பங்ேகற்க வேண்டும்

குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜாண்தங்கம் விடுத்துள்ள அறிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க நாளை (22ம் தேதி) மாலை வருகிறார். அவருக்கு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தக்கலை பேருந்து நிலையம், குழித்துறை அண்ணா சிலை  சந்திப்பு, மேல்புறம் சந்திப்பு, அருமனை சந்திப்பு ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே முதல்வரை வரவேற்க மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், தொண்டர்கள் அந்தந்த பகுதிகளில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: