சினிமா தியேட்டர்களுக்கு கடனுதவி, 3 மாத மின்கட்டணம் ரத்து: ஆந்திரா அரசு அறிவிப்பு

ஆந்திராவில் சினிமா தியேட்டர்களுக்கு கடனுதவி அளிப்பதுடன் 3 மாத மின் கட்டணம் ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதமாக சினிமா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 7 மாதத்துக்கு மேல் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து சினிமா தொழிலை மீட்க, தெலங்கானா அரசு சில சலுகைகளை கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, ரூ.10 கோடிக்குள் தயாராகும் படங்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இப்போது ஆந்திரா அரசும் தியேட்டர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

ஆந்திராவில் மொத்தம் 1,100 சினிமா தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாத மின் கட்டணத்தை ரத்து செய்வதாக ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் கட்டணத்தை தவணை முறையில் கட்டவும் அனுமதி வழங்கியுள்ளார். நகரங்கள், புறநகர்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கு வட்டி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆந்திரா அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: