போராடியபடி மேயர்கள் அலுவலகம் நடத்துவதா.குடியிருப்பு பகுதிகளில் தர்ணா நடத்த அனுமதிப்பது தவறான முன்னுதாரணம்: உயர் நீதிமன்றம் வேதனை

புதுடெல்லி: குடியிருப்பு பகுதிகளில் தர்ணா போராட்டங்களை அனுமதிப்பது தவறான முன்னோடி ஆகிவிடும் என உயர் நீதிமன்றம் கவலையும், வேதனையும் தெரிவித்து உள்ளது. சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பாக தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாநகராட்சி மேயர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக  சிவில் லைன்ஸ் குடியிருப்போர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை நீதிபதி சஞ்சீவ் சச்தேவா அமர்வில் நேற்று நடைபெற்றது. விசாரணையில் குடியிருப்போர் சங்க மனுவை எதிர்த்து கெஜ்ரிவால் வீட்டுக்கு அருகாமை வீட்டில் வசிப்பவர் நேரில் ஆஜராகி கூறுகையில், ‘‘மேயர்கள் போராட்டம் அமைதியாக நடைபெறுகிறது. முதல்வரின் வீடு உள்ள பகுதியில் சாலையில் போக்குவரத்து தடை எதுவும் இல்லை. போராட்டம் நடத்தும் பாஜவினர் இயற்கை அழைப்புக்கு அருகில் உள்ள அம்பேத்கார் நினைவிட கழிப்பறையை பயன்படுத்துகிறார்கள்’’, எனக் கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி கூறியதாவது: போராட்டம் அமைதியாக நடப்பது சரி தான். ராம்லீலா, ஜந்தர் மந்தர் என போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களிலும் போராட்டங்கள் அமைதியாகத் தான் தொடங்குகிறது. இடையில் சிலர் குறுக்கிடும் போது, அதுவே கலவரமாக மாறுகிறது. போராட்டம் நடத்த மக்களுக்கு உரிமை உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. ஆனால், போராட்டம் நடத்த என மத்திய அரசு அடையாளப்படுத்தி உள்ள இடத்தில் நடத்துவதே முறையானது.

அதற்கு பதில் குடியிருப்புகளில் போராட்டம் நடத்த போலீஸ் எப்படி அனுமதித்தது என வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது. குடியிருப்பு பகுதியில் அரங்கேறி வரும் போராட்டத்தில், அதில் கலந்து கொண்டவர்கள், இயற்கை அழைப்புக்கு எங்கு செல்கிறார்கள். அதுவும் மேயர்களும் அவர்கள் சார்ந்த கட்சியில் இருந்து ஏராளமான தொண்டர்களும் குடியிருப்பு பகுதியில் சாலையில் போராடுவது முறை தானா. அதுவும் தொடர்ந்து 11 நாளாக நடைபெறும் போராட்டத்தில், மாநகராட்சி பணிகளையும் சாலையிலேயே நடைபெறுவதாக செய்திகளை பார்த்து தெரிந்து கொண்டேன்.

நடு ரோட்டில் அலுவலகம் அதுவும் குடியிருப்பு பகுதியில் செயல்படுவதை போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா. இது என்ன அவலம். மாநகராட்சி பணிகளுக்கு என வரும் பொது மக்களின் கூட்டமும் போராட்ட களத்தில் குவிந்தால் நிலைமை எப்படி இருக்கும். எல்லோரும்,எப்போதும் ஒரே மாதிரி இருப்பார்கள் என கணிக்கவும் முடியாது அல்லவா. குடியிருப்பு பகுதிகளில் போராட்டம் நடத்த அனுமதிப்பது தவறான முன்னோடி ஆகும். மைதானங்களில் நடைபெறும் தர்ணாக்களை போல குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் தரப்பு உடனடி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். விசாரணை மீண்டும் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

Related Stories: