எம்சிடியில் ரூ.2,400 கோடி நிதி முறைகேடு பற்றி விவாதிக்க நாளை சிறப்பு சட்டசபை கூட்டம்: துணை முதல்வர் சிசோடியா அறிவிப்பு

புதுடெல்லி: பாஜ ஆளும் டெல்லியின் மூன்று மாநகராட்சிகளால் ரூ.2,400 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து விவாதிப்பதற்காக ஒருநாள் சிறப்பு சட்டமன்றக்கூட்டத்திற்கு துணை முதல்வர் சிசோடியா அழைப்பு விடுத்துள்ளார். எம்சிடிகளுக்கான நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை வழங்க வலியுறுத்தி கெஜ்ரிவால் வீடு முன்பாக பாஜ மேயர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அதற்கு எதிர்வினையாகவே ஆம் ஆத்மியின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.டெல்லியின் மூன்று மாநகராட்சிகளும் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜ வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. ஆனால், மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆளும் கட்சியாக உள்ளது. அதோடு, வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள டெல்லி மாநகராட்சி தேர்தலை ஆம் ஆத்மி கட்சி குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.

இதனால், மூன்று மாநகராட்சியிலும் ஊழல் நடைபெறுவதாகவும், நிர்வாக திறமையின்மை காரணமாக எம்சிடி ஊழியர்களுக்கு சம்பளம் கூட கடந்த சில மாதங்களாக  அவர்களால் வழங்க முடியவில்லை என்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனை எதிர்கொள்ள முடியாமல் தவித்த பாஜ கட்சி, தற்போது மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காததே மாநகராட்சிகளின் நிதி சிக்கலுக்கு காரணம் என மேயர்கள் பதிலடி கொடுத்து வந்தனர். இதன்தொடர்ச்சியாக, டெல்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.13,000 கோடியை  உடனே விடுவிக்க வலியுறுத்தி பாஜ கட்சியை சேர்ந்த மேயர்கள், அக்கட்சி தொண்டர்கள் திடீரென முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதோடு, நிலுவைத்தொகையை வழங்கும்வரை போராட்டத்தை கைவிடப்பவோதில்லை என்று கெஜ்ரிவால் வீடு முன்பாக அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும், நேற்று முன்தினம் முதல் மாநகராட்சி அலுவலகப்பணிகளை தெருவில் நடைபெறும் போராட்டக்களத்திலேயே தொடங்கினர். கோப்புகளையும் அங்க வரைவழைத்து யேமரகள் கையெழுத்திட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன்மூலம் ஆம் ஆத்மி அரசுக்கு அழுத்தம் கொடுக்க இந்த போராட்டத்தை மேயர்கள்கநடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்வினையாக, புதுடெல்லி நகராட்சி கவுன்சிலின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி திடீர் குற்றம்சாட்டியது. மேலும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு முன்பாக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் வீடு முன்பாக நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தச் சென்றனர்.

 அவர்களை டெல்லி  போலீசார் மடக்கி விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். குறிப்பாக,  ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், ராஜோரி தொகுதி எம்எல்ஏவுமான ராகவ் சதா, அடிசி உள்ளிட்டோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வீடு முன்பாக ஆம் ஆத்மி கட்சியினருடன் இணைந்து போராட்டம் நடத்துவதற்காக சென்றார். ஆனால், அவரை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினா். பின்னர் விசாரணைக்காக ராஜேந்திர நகர் காவல் நிலையத்திறகு அழைத்து சென்றார். அவருடன் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 9 பேரையும் போலீசார் பிடித்து சென்றனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த ராகவ் சதா, சென்ட்ரல் டெல்லியில் உள்ள மாநகராட்சி மைய கட்டிடத்தின் வளாகத்தைப் பயன்படுத்தி வருவதற்காக தெற்கு மாநகராட்சி வாடகையாக ரூ.2,457 கோடியை செலுத்த வேண்டும். ஆனால், இதனை வடக்கு மாநகராட்சி முழுமையாக தள்ளுபடி செய்துவிட்டது. இதன் விளைவாக பொதுக் கருவூலத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டது. இந்த ஊழலுக்கு யார் காரணம்? .நாங்கள் மத்திய உள்துறை அமைச்சரையும்  துணை நிலை ஆளுநரையும் சந்தித்து இந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட சென்றோம். ஆனால், எங்களை போலீசார் கைது செய்துள்ளனர் என கூறினார்.

அதேபோன்று,  டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க எங்களிடம் பணம் இல்லை என்று வடக்கு மாநகராட்சி நிர்வாகம் மீண்டும் மீண்டும் கூறுகிறது. ஆனால் இது தெற்கு மாநகராட்சிக்கு ரூ.2500 கோடி நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்கிறது. இதன் காரணமாகவே இது குறித்து செயலாளர் மட்ட விசாரணைக்கு டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உத்தரவிட்டார் என ஆம் ஆத்மி கட்சியின் அடிசி கூறினார்.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக, பாஜ ஆளும் டெல்லியின் மூன்று மாநகராட்சிகளால் ரூ.2,400 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது குறித்து விவாதிப்பதற்காக ஒருநாள் சிறப்பு சட்டமன்றக்கூட்டத்திற்கு துணை முதல்வர் சிசோடியா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து சிசோடியா தனது டவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், “எம்.சி.டி.யில் ரூ.2400 கோடி அளவுக்கு நிதி முறைகேடாகப் பயன்பட்டது குறித்து விவாதிக்க வரும் வியாழனன்று ஒருநாள் சிறப்பு சட்டப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார். இதனால், ஆம் ஆத்மி மற்றும் பாஜ ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களுடன் வரிந்துகட்டும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories: