மோடி-சீக்கியர் உறவு குறித்து 5 நாளில் 2 கோடி பேருக்கு இமெயில்: படுவேக பணியில் ஐஆர்சிடி

புதுடெல்லி: ‘பிரதமர் மோடி  சீக்கியர்கள் சிறப்பு உறவு’ என்ற 47 பக்க கையேட்டை மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கடந்த 1ம் தேதி வெளியிட்டனர். இதில், 1984 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தந்தது, கர்தார்பூர் வழித்தடம் அமைத்தது உள்ளிட்ட சீக்கியர்களுக்காக பிரதமர் மோடி ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு பணிகள் குறித்த தகவல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் உள்ள இந்த கையேட்டை, ரயில்வேயின் அங்கமான ஐஆர்சிடிசி தனது வாடிக்கையாளர்களுக்கு இ மெயில் மூலம் அனுப்பி வருகிறது. கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை 5 நாளில் 2 கோடி பேருக்கு இ மெயில் மூலம் இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் ஒன்று திரண்டு தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை சமாதானப்படுத்த இந்த முயற்சியை மத்திய அரசு கையாண்டுள்ளது. மேலும், சீக்கிய சமூகத்தினருக்கு மட்டும் இந்த இ மெயில் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஐஆர்சிடிசி, ‘அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இது அனுப்பப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

Related Stories: