சதுப்பேரியில் ரூ.13 கோடியில் பணிகள் தீவிரம் குப்பையில் தரம் பிரித்த உரம் விவசாயத்துக்கு பயன்படுமா? ஆய்வுக்கு சென்னை அனுப்பிவைப்பு

வேலூர்:  வேலூர் சதுப்பேரியில் ரூ.13 கோடியில் நடைபெறும் குப்பையில் இருந்து பிரித்த உரம் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த சோதனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் சதுப்பேரி குப்பை அகற்ற கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பின்லாந்தில் இருந்து நவீன இயந்திரங்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கன்டெய்னர்கள் மூலமாக வேலூர் கொண்டுவந்தனர். இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி சதுப்பேரியில் நவீன இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் தொடங்கியது.  

இந்த இயந்திரத்தின் மூலமாக மணல், சிறிய கற்கள், ஜல்லி கற்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் உட்பட 19 வகையான பொருட்கள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் இந்த குப்பை கழிவுகளில் இருந்து உரம் பிரிக்கப்பட்டு வருகிறது. அதனை விவசாய நிலத்திற்கு பயன்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்வதற்காக சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வு முடிவில் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய உரமாக இருந்தால், விவசாயிகளுக்கு வழங்கப்படும், இல்லாத பட்சத்தில் குண்டும், குழியுமான சாலைகளுக்கு கொட்டி நிரப்ப பயன்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: