‘வீடு தேடி திருப்பதி லட்டு பிரசாதம்’ எனக்கூறி பக்தர்களிடம் மோசடி செய்த 7 போலி வெப்சைட் மீது வழக்கு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதங்கள் வீடுதேடி வரும் எனக்கூறி பக்தர்களிடம் மோசடி செய்த 7 போலி வெப்சைட்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரிசன டிக்கெட்டுகளும், ஆன்லைன் மூலமாகவே பக்தர்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் திருப்பதி தேவஸ்தானம் வெப்சைட் போல், போலியாக வெப்சைட் தொடங்கி, ‘வீடு தேடி வரும் திருப்பதி பிரசாதம்’ என விளம்பரப்படுத்தினர். இந்த போலி வெப்சைட்களில் ஏராளமான பக்தர்கள் பணத்தை கட்டி ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

 

இதுகுறித்து தேவஸ்தான நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 7 போலி வெப்சைட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8ம் தேதி திருப்பதி கிழக்கு நகர காவல் நிலையத்தில் தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 7 போலி வெப்சைட் நிறுவனங்கள் மீது திருப்பதி கிழக்கு நகர போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ‘பக்தர்கள் போலி வெப்சைட்களை நம்பி ஏமாற வேண்டாம்’ என்று  தேவஸ்தான அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: