‘மலையளவு’ நம்பினால் சாப்பாட்டுக்கு கஷ்டமில்லே! டிசம்பர் 11 சர்வதேச மலைகள் தினம்

நெல்லை: மலைகளை பாதுகாப்பது, மலைப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, மலையின் சுற்றுச்சூழலை பாதுகாப்பது போன்ற காரணங்களுக்காக 2002ம் ஆண்டு மலைகளின் கூட்டாளி என்ற அமைப்பு  மேற்கொண்ட முயற்சியினால், ஐநா சபை 2002ம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டு என்று அறிவித்தது. அதன்பிறகு 2003ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதியை யுனெஸ்கோ அமைப்பு சர்வதேச மலைகள் தினமாக அறிவித்தது.  மக்களின் நலவாழ்வில் மலைகளின் முக்கியத்துவம், மலைகளை பாதுகாப்பது, மலைவாழ் மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மலைகளால் உண்டாகும் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக  ஆண்டுதோறும் இந்த சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.

 உலக மக்கள் தொகையில் 13% பேர் தற்போதும் மலைகளில் வாழ்ந்து வருகிறார்கள். 40% பேர் உணவு தேவைக்கு மலைகளையே நம்பி உள்ளனர். உலக தண்ணீர் தேவையில் 75 சதவீதத்தை மலைகளே பூர்த்தி செய்கின்றன. மலைகளில்  விளையும் அற்புத மூலிகைகள், மரங்கள் மற்றும் வன உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மலைகள் சமவெளி பிரதேசங்களின் தண்ணீர் தொட்டி என்று வர்ணிக்கப்படுகின்றன. நாம் சுவாசிக்க சுத்தமான காற்றைப் பெற மலைக்காடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.  ஆனால் தற்போது உலகில் உள்ள மிகவும் பழமையான மலைகளின்  உயரம் நாளுக்குநாள் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் காடுகளில் உள்ள மரங்களை அழிப்பது, வனவிலங்குகளை வேட்டையாடுவது போன்ற  செயல்கள் தற்போது அதிகரித்து வருகிறது.

இதனால் காடுகளின் பரப்பளவு குறைவதோடு, வனவிலங்குகளின் வாழ்விடத்திற்கும் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் அரிய வகை மரங்கள், மருத்துவ மூலிகைகள் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையும் குறைகிறது.  மலை வளம் பாதித்தால் மழை வளம் பாதித்து நாம் உணவுச் சங்கிலியை பறிகொடுப்போம். இதனால் இயற்கை சமநிலையில் சீர்குலைவு ஏற்படுகிறது. எனவே உலக உயிர்களை பாதுகாக்க மலைவளம் காப்போம்.

Related Stories: