தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள்: சென்னையில் பயிற்சி பெற்று வரும் பீகார் கல்வி அதிகாரிகள் வியப்பு: தங்கள் மாநிலத்திலும் நிறைவேற்ற உறுதி

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் பள்ளி படிப்பை முடிப்பவர்களில் 49% பேர் கல்லூரியில் சேருகிறார்கள். அதாவது ஒன்றிய அரசு 2035க்கு வைத்த இலக்கை நாம் 2019லேயே தொட்டுவிட்டோம். மற்ற மாநிலங்கள் எல்லாம் இதில் பின்தங்கி இருக்கிறது. கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளாவில் ஜிஇஆர்(உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம்) 37% ஆக உள்ளது. டெல்லியில் ஜிஇஆர் 46.3% ஆக இருக்கிறது. தெலங்கானாவில் இது 36.2%. ஆந்திராவில் 32.4%. மகாராஷ்டிராவில் 32. கர்நாடகாவில் வெறும் 28%தான். இந்தியாவின் மொத்த ஜிஇஆர் 28% என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களை மட்டுமின்றி பல வல்லரசு நாடுகளையும் தமிழ்நாடு இதில் முந்தி இருக்கிறது. சீனாவின் ஜிஇஆர் 43%தான், தமிழ்நாட்டில் 49%. மலேசியாவின் ஜிஇஆர் 45%, பஹ்ரைன் 47%. இப்படி வளர்ந்த நாடுகளுக்கும் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது.

கொரோனாவுக்கு பிறகு பள்ளி மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரிக்கத் தொடங்கியது. அதுதான் பத்து ஆண்டுகளுக்கு பிறகு திமுக அரசு ஆட்சி பொறுப்பில் அமர்ந்த தருணம். மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைத்து அவர்களின் எதிர்காலத்தை சீரமைக்க திமுக அரசு ஒவ்வொரு திட்டங்களையும் கவனமாக கையாளத் தொடங்கியது. இடைநிற்றலை தவிர்க்க தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை நியமித்து வீடு வீடாக சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை தொடங்கினர். இது எதிர்பார்த்ததை விட அபார வெற்றியை பெற்று தந்தது. மேலும் வளர்ந்த நாடுகளிலும் இந்த திட்டம் பேசுபொருளாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து உயர் கல்விக்கு நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன் காரணமாக உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில்தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்வித்துறை அலுவலர்கள் 250 பேர் சென்ைன வந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த மாதம் 22ம் தேதி முதல் வருகிற 24ம் தேதி வரை பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி 5 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்டமாக 50 அலுவலர்களும், 2ம் கட்டமாக 40 அலுவலர்களும், மூன்றாம் கட்டமாக கடந்த 6ம்தேதி 27 அலுவலர்களும் பயிற்சியில் பங்கேற்றனர். மேலும், 100 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சின் மூலம் பீகாரில் பணியாற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள்,

புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், தகைசால் பள்ளிகள், உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் ஏற்படுத்துதல், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் பயிற்சிகள், சிறப்புத் திட்டங்கள் சார்ந்த விரிவான விளக்கங்களை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,இந்தியாவிலேயே கல்விக்கென அதிக நிதி ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடுதான். ரூ40 ஆயிரம் கோடி கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலத்திட்டங்கள் அதிகம் கொடுக்கும் மாநிலமும் தமிழ்நாடுதான். இதை செய்தி வாயிலாக அறிந்து தான் பீகார் அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

இங்கே மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டம், ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனி புத்தகம், பள்ளி சீருடை, இலவச பஸ் பாஸ் ஆகியவற்றை அறிந்து ஆச்சர்யப்படுகின்றனர். நடப்புக் கல்வியாண்டில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறை, உயர்தர ஆய்வகம் ஆகியவை அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளன. இதுபோன்ற திட்டங்களை தங்கள் மாநிலத்திலும் கொண்டுவந்து கல்வியை மேம்படுத்துவோம் என பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் தொலைக்காட்சி மூலம் தற்போதுவரை மாணவர்களுக்கு உயர்க்கல்விக்கு வழிகாட்டப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக்கென தனி சேனலை அரசே கையாளும் முறை அவர்களுக்கு கூடுதல் வியப்பூட்டும் விதமாக அமைந்துள்ளது.

போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள், உயர்கல்விக்கான வழிகாட்டுதல்கள், அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு கொடுக்கும் திட்டங்கள் குறித்து கல்வி தொலைக்காட்சி மூலமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் கலந்துகொண்டு பேசும் நிகழ்ச்சி கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் திறனும் அதிகரிக்கும். கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் (NCERT) நிறுவனம் உருவாக்கியிருக்கிய மணற்கேணி செயலி மூலம் (https://manarkeni.tnschools.gov.in) நீட், ஜேஇஇ போன்ற அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

The post தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை திட்டங்கள்: சென்னையில் பயிற்சி பெற்று வரும் பீகார் கல்வி அதிகாரிகள் வியப்பு: தங்கள் மாநிலத்திலும் நிறைவேற்ற உறுதி appeared first on Dinakaran.

Related Stories: