கார்டு பழுதால் 7 மாதமாக ரேஷன் பொருள் பெற முடியாத பழங்குடியின குடும்பம்

கூடலூர்: கூடலூர் அருகே ரேஷன் கார்டு பழுதால் 7 மாதமாக ரேஷன் பொருட்கள் பெற முடியாமல் பழங்குடியிடன குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன் எஸ்டேட் பகுதியில் முறம்பிலாவு ஆதிவாசி குடியிருப்பில் வசிப்பவர் ராஜன் (48). இவர் தனது தாயார் குள்ளி, மனைவி சாந்தி மற்றும் மூன்று மகன்களுடன் வசிக்கின்றார். கூலித் தொழிலாளியான இவரது ரேஷன் கார்டில் கோளாறு ஏற்பட்டதால் கடையில் கடந்த 7 மாதமாக அரிசி உள்ளிட்ட பொருட்கள் பெற முடியவில்லை.

 

வறுமை நிலையில் உள்ள இவர்கள் இலவச அரிசி கிடைக்காததால் கடைகளில் பணம் கொடுத்து அரிசி வாங்கி வருகின்றனர். கொரோனா பாதிப்புகள் காரணமாக வேலை வாய்ப்பும் இல்லாமல் குடும்பத் தேவைக்காக உணவுப் பொருட்கள் வாங்குவதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே பழுதான ரேஷன் கார்டை புதுப்பித்து தரக்கோரி கடந்த 7 மாத காலமாக கூடலூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றார்.

ஒவ்வொரு முறையும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லும்போது அடுத்த மாதம் சரி செய்து தருவதாக கூறி காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் வேலைக்கு செல்ல முடியாமலும் ரேஷன் கார்டை புதுப்பிக்க முடியாமலும் அலைந்து திரிவதாகவும் ராஜன் தெரிவித்துள்ளார். இதேபோல் ரேஷன் கார்டு தொலைந்து போனவர்கள், பழுதான கார்டு வைத்துள்ளவர்கள் அதனை புதுப்பிக்க முடியாத நிலையில் ரேஷன் பொருட்களை பெற முடியாமல் அலைந்து திரிவதாகவும் இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக புதிய ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: