கவுகாத்தி ஐஐடி ஆய்வாளர்கள் சாதனை காற்றில் இருந்து தண்ணீர் தயாரிக்கும் புதிய நுட்பம்

கவுகாத்தி: காற்றில் இருந்து தண்ணீரை எடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை கவுகாத்தி ஐஐடி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து போர்வெல் உள்ளிட்ட வழிமுறைகளில் தண்ணீரை எடுக்கிறோம். அது போல் காற்றிலிருந்தும் தண்ணீரை எடுக்கும் தொழில்நுட்பம் வெகு சில இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பத்தில் மேலும் ஓர் யுக்தியைக் கண்டறிந்துள்ளனர் ஐஐடி கவுகாத்தி ஆராய்ச்சியாளர்கள். இது குறித்து ஆய்வுக்குழுவின் தலைவரான பேராசிரியர் உத்தம் மன்னா கூறியதாவது: காற்றிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதை ‘ஹைட்ரோபோபிசிட்டி’ என்று கூறுகிறோம். இதற்காக பல உபகரணங்கள் பயன்படுகின்றன. இதில் ஒரு புதிய முயற்சியாக, தண்ணீரை அறுவடை செய்யும் வகையிலான ஈர்ப்பு தளத்தை உருவாக்கி, அதன்மூலம் பலன் பெறும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்திருக்கிறோம்.

உதாரணத்துக்கு ஒரு சிறிய காகிதத்தில் பாலிமெரிக் ரசாயனத்தை தெளிப்பதன் மூலம், தண்ணீரை ஈர்க்கும் ஹைட்ரோபிலிக் தளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். இவற்றை ரசாயன முறையில் மேலும் கொஞ்சம் மாற்றமடையச் செய்து ஈரப்பதத்துக்காக இரண்டு விதமான எண்ணெய்களையும் பயன்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட ஸ்பாஞ்ச் போல துளைகள் கொண்டதாக வடிவமைக்கப்படும் இந்த ஈர்ப்பு தளமானது காற்று, பனி, நீராவியிலிருந்து தண்ணீரைத் தயாரிக்கும். நாங்கள் வடிவமைத்துள்ள இந்த ஈர்ப்பு தளங்களுக்கு ஹைட்ரோபிலிக் ஸ்லிப் என்று பெயர் வைத்திருக்கிறோம். தாமரை இலை மீது படர்ந்திருக்கும் தண்ணீரைப் பார்த்திருப்போம். இந்த வழிமுறையை தாமரை இலை தண்ணீர் போன்ற தோற்றத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம். வழக்கமாக ஏர் பில்டர்கள் மூலம் உறிஞ்சப்படும் ஈரக் காற்றானது குளிர்விக்கப்பட்டு, பிறகு தண்ணீராக மாற்றப்படும். ஆனால், இந்த புதிய முறையில் இதற்கென்று எந்த குளிரூட்டப்பட்ட வசதியும் தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: