8 வழிச்சாலை மத்திய அரசு திட்டம்; வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் முற்றிலும் ஒழியும்: முதல்வர் பழனிசாமி பேட்டி

திருவாரூர்: விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழை சேதங்கள் கணக்கெடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேற்று ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, இன்று காலை நாகை மாவட்டத்திற்கு சென்றார். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்ட அவர், மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டார். தொடர்ந்து நாகூர் தர்காவிலும் முதலமைச்சர் வழிபட்டார்.

அண்மையில் பெய்த கனமழையால் தர்காவின் குளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் அப்போது ஆய்வு செய்தார். பின்னர் கருங்கன்னி பகுதிக்கு சென்று, மழையால் சேதமான பயிர்களை ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் ஆய்வுக்குப்பின், திருவாரூர் சென்ற முதலவர், கொக்காலக்குடியில் சேதமடைந்த பயிர்களை வயலில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டிக்கு சென்ற அவர் புயல், மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமிற்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து தென்னவராயன் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; புரெவி புயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்; 5,509 வீடுகள் சேதமாகியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,07,463 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்னர். 53,063 ஹெக்டர் நெற்பயிர்கள் சேதம், இதர பயிர்களின் சேதம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. விடுபட்ட பகுதிகளிலும் புயல், மழை சேதங்கள் கணக்கெடுக்கப்படும். சமபரப்பு, கடல் சீற்றத்தால் திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

திருவாரூர் மாவட்டத்தில் 53,063 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளது. நிவர் புயல் போன்றே, புரெவி புயல் பாதிப்புகளையும் ஆய்வு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். நோய் பரவலை தடுக்க மாவட்டம் முழுவதும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 492 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என கூறினார்.

வேளாண் சட்டத்தால் தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?

தொடர்ந்து பேசிய அவர்; 3 வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு என்பதை சொல்லுங்கள்? விவசாயிகளுக்கு நன்மை தரும் சட்டங்களை மட்டுமே அதிமுக ஆதரிக்கும். புதிய வேளாண் சட்டங்களால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் முற்றிலும் ஒழியும். விவசாயிகள் விரும்பினால் மட்டுமே விளான் சட்டத்தின் பயனை பெற முடியும்; யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. டெல்டா விவசாய பகுதிகளில் குறைந்தபட்ச ஆதார விலை தற்போது அமலில் தான் உள்ளது.

இடைத்தரகர்கள் இன்றி விளைபொருட்களை விற்பனை செய்யும் ஒரே மாநிலம் தமிழகம். விலை பொருட்களை நல்ல விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். நான் விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறேன் எனவும் கூறினார்.

8 வழிச்சலை அமைக்கப்படுமா?

மேலும் 8 வழிச்சலை தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்த முதல்வர்; விபத்து, கால விரயம், எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் அவசியம். 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; நிலம் கையகப்படுத்தியது மட்டுமே மாநில அரசு . 8 வழிச்சாலை என்பது நீண்டகால திட்டம்; இப்போது தொடங்கினாள் கூட முடிய 6 ஆண்டுகள் ஆகும். நாடு மற்றும் தொழில் வளர்ச்சிக்கு சாலைகள் அவசியம். வெளிநாடுகளில் குறைந்ததே 8 வழிச்சாலைதான் உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: