தீவிரவாதிகளுடன் சீனா கைகோர்த்து மியான்மர் எல்லையிலும் இந்தியாவுக்கு குடைச்சல்: நாசவேலைக்காக ஆயுதங்கள் சப்ளை

புதுடெல்லி: லடாக், அருணாச்சலபிரேதச எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் செய்து வந்த நிலையில், மியான்மர் எல்லையில் தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்த்து அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்து இந்தியாவுக்கு எதிராக சீனா தூண்டிவிடுவதாக ராணுவ அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக கடந்த 7 மாதங்களாக, இந்தியா-சீனா இடையே மோதல், பதற்றம் நீடித்து வருகிறது. இதே போல அருணாச்சல பிரதேசம் திபெத்தின் ஒருபகுதியாக சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

இதன் காரணமாக, லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய எல்லைகள் பதற்றத்துடனே காணப்படுகிறது. இந்நிலையில், அண்டை நாடான மியான்மர் எல்லையில் சில தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள், மறைவிடம் அளித்து சீனா உதவி வருவதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். மியான்மரில் செயல்படும் யுனைடெட் வா ஸ்டேட் ஆர்மி, அரகான் ஆர்மி உள்ளிட்ட அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக அந்நாட்டு அரசு இந்தாண்டு அறிவித்துள்ளது.

இந்த அமைப்புகள் சீனாவின் சார்பில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் கிளர்ச்சி அமைப்புகளுக்கு ஆயுதங்கள், மறைவிடங்கள் அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் தேடப்படும் நான்கு முக்கிய கிளர்ச்சி அமைப்புகளின் தலைவர்கள், சீனாவின் குன்மிங் நகரில் தீவிரவாத பயிற்சி அளித்து வருவதாக கடந்த அக்டோபரில் நாட்டின் பல்வேறு உளவு அமைப்புகள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.

மேலும், தனிநாடு கோரும் நாகா புரட்சிகர அமைப்பை சேர்ந்த 3 இனவாத அமைப்புகள் உள்ளிட்டவை ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணியில் இருக்கும் சீன ராணுவ அதிகாரிகளையும், இடைத்தரகர்களையும் இந்தியா-மியான்மர் எல்லையில் சந்தித்து வருவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.

சீனா, பாகிஸ்தான் உடனான 14,000 கி.மீ. தொலைவு எல்லை பிரச்னையில் ஏற்கனவே இந்திய ராணுவம் பதற்றத்தில் உள்ள நிலையில், தற்போது மியான்மர் எல்லை பிரச்னை மத்திய அரசை கவலை கொள்ள செய்துள்ளது. கடந்த அக்டோபர் 21ம் தேதி நடந்த மறைமுக தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்த பிறகு, மியான்மர் எல்லைக்கு இந்தியா ஆயிரம் படைகளை அனுப்பி உள்ளது. சீனா மறுப்பு சீன வெளியுறவு அமைச்சகம், ``இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக கூறுவது முற்றிலும் தவறானது,’’ என்று மறுத்துள்ளது.

Related Stories: