துபாய்க்கு டாலர் கடத்திய சம்பவத்தில் முக்கிய அரசியல் பிரமுகருக்கு தொடர்பு: சொப்னா, சரித் அதிர்ச்சி வாக்குமூலம்

திருவனந்தபுரம்: துபாய்க்கு டாலர் கடத்திய சம்பவத்தில் முக்கிய அரசியல் பிரமுகருக்கும் தொடர்பு உள்ளது என சொப்னாவும், சரித்குமாரும் சுங்க இலாகாவிடம் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா தலைமையிலான கும்பல் இந்தியாவில் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை டாலர்களாக மாற்றி வெளிநாட்டுக்கு கடத்தியுள்ளனர். கடந்த சில தினங்களாக நடத்திய விசாரணையில், மிகப்பெரும் அளவில் கேரளாவில் இருந்து துபாய் உட்பட வளைகுடா நாடுகளுக்கு இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணத்தை கடத்தி இருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில், சுங்க இலாகாவின் காவலில் உள்ள சொப்னாவும், சரித்குமாரும் அதிர்ச்சி வாக்குமூம் அளித்துள்ளனர். அதில், டாலர் கடத்தலில் கேரள முக்கிய அரசியல் பிரமுகருக்கும் தொடர்பு உள்ளது என சரித்குமார் தெரிவித்துள்ளார். இதை சொப்னாவும் உறுதி செய்துள்ளார். மேலும் அந்த முக்கிய பிரமுகருடன் தனக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாகவும் சொப்னா கூறியுள்ளார். இந்த டாலர் கடத்தலுக்கான இந்திய பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்து மத்திய அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது.

அந்த அரசியல் பிரமுகர் கடந்த சில ஆண்டுகளாக துபாய் உட்பட வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். இதுகுறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.மேலும் அந்த அரசியல் பிரமுகரின் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த முக்கிய பிரமுகர் விமான நிலையத்தில் எந்த பரிசோதனையும் செய்யாமல் தனது செல்வாக்கால் எளிதாக சென்று வந்துள்ளார். இந்த செல்வாக்கை பயன்படுத்திதான் இவர் டாலர்களை கடத்தியுள்ளார். இதற்கான பணத்தை அந்த முக்கிய பிரமுகரிடம் இருந்து வாங்கி சொப்னாதான் டாலர்களாக மாற்றி கொடுத்துள்ளார். அவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Stories: