சீனர்கள், திபெத்தியர்களை குடியமர்த்தியது அருணாச்சல பிரதேச எல்லையில் 3 கிராமங்களை உருவாக்கிய சீனா: செயற்கைக்கோள் மூலம் அம்பலம்

புதுடெல்லி: சீனா தொடர்ந்து தனது அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றது. கிழக்கு லடாக்கில் இந்திய - சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருநாட்டு படைகளும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் இந்திய பிராந்தியத்திற்கு மிக அருகில் சீனா 3 புதிய கிராமங்களை உருவாக்கி உள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்னை இல்லை என சீன மறுக்கிறது. எனினும், அருணாச்சலப் பிரதேச எல்லை அருகே சீனா 3 கிராமங்களை உருவாக்கி இருப்பது, அதன் பிராந்திய உரிமைகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கையாக கருதப்படுகின்றது.

இது குறித்து சீன பார்வையாளர் டாக்டர் பிரம்மா செல்லானி கூறுகையில், “கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திபெத்திய உறுப்பினர்களையும், சீனர்களையும் எல்லையோர கிராமங்களில் சீன ராணுவம் குடியேற செய்கிறது. இந்த செயலின் மூலமாக இந்திய எல்லையில் தனது பிராந்திய உரிமை கோரலை வலுப்படுத்துகிறது. மேலும், எல்லையில் ஊடுருவல்களை அதிகரிக்க செய்வதற்கும் சீனா பயன்படுத்திக் கொள்கின்றது,” என்றார். இந்திய-சீன எல்லைக்கு அருகே பூடான் எல்லையான டோக்லாமில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் சீனா இந்த புதிய கிராமங்களை உருவாக்கி உள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த புகைப்படங்கள் வெளியாகி ஒரு வாரமான நிலையில், சீனாவின் எல்லையோர கிராமங்கள் குறித்த அறிக்கைகள் வெளியாகி உள்ளன. கிழக்கு லடாக்கில் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வந்த அதே நேரத்தில் இந்த கிராமங்கள் சீனாவால் உருவாக்கப்பட்டுள்ளன. ‘பிளானட் லேப்’ என்ற அமைப்பிடம் இருந்து பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள், இதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

* இந்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தில், இப்பகுதியில் ஒரு கிராமம் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. மேலும், 20 கட்டுமானங்கள் அவற்றில் காணப்படுகின்றன. இவை மர குடிசைகள்.

* கடந்த நவம்பர் 28ம் தேதி எடுக்கப்பட்ட 2வது செயற்கைக்கோள் புகைப்படத்தில், அதே இடத்தில் குறைந்தது 50 கட்டுமான அமைப்புகளை கொண்ட 3 கூடுதல் இடங்கள் தெரிகின்றன.

* ஒவ்வொரு இடமும் ஒரு கிலோ மீட்டருக்குள் உள்ளது. அனைத்து இடங்களும் தார் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories: