இந்தியாவின் பெருமைமிகு விமானம் தாங்கி கப்பல் விராட்டை உடைப்பதில் பாதுகாப்பு துறை குறி: அருங்காட்சியகமாக்க ஒத்துழைக்க மறுப்பு

புதுடெல்லி: இந்தியாவின் பெருமைமிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் விராட்’டை அருங்காட்சியமாக மாற்றும் தனியார் நிறுவனத்தின் முயற்சிக்கு உதவ, பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.இந்திய கடற்படையில் விமானம் தாங்கி போர்க்கப்பலான, ‘ஐஎன்எஸ் விராட்’ கடந்த 1987ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 30 ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு, கடந்த 2017ம் ஆண்டு  கடற்படையில் இருந்து அதற்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதை உடைப்பதற்காக கடந்த ஜூலை மாதம் ஏலம் விடப்பட்டது. அதில், குஜராத்தை சேர்ந்த, ‘ராம் கிரீன் ஷிப்’ என்ற நிறுவனம் ஏலம் எடுத்தது. பின்னர், குஜராத் மாநிலம், அலாங்கில் உள்ள கப்பல் உடைப்பு தளத்துக்கு விராட்  எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் கடற்படைக்கு பெருமை சேர்த்த இந்த விமானத் தாங்கி கப்பலை, அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு மும்பையை சேர்ந்த, ‘என்விடெக் மெரைன் கன்சல்டன்ஸ்’ என்ற நிறுவனம் திட்டமிட்டது.

இதற்காக, ரூ.100 கோடி கொடுத்து இக்கப்பலை ராம் நிறுவனத்திடம் இருந்து வாங்க முடிவு செய்தது. இதற்காக, என்விடெக் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தடையில்லா சான்று வாங்குவதற்கு முயற்சித்தது. ஆனால், கப்பலை உடைக்காமல் தடுத்து காப்பற்ற முயற்சி எந்த முயற்சிக்கும் பாதுகாப்பு அமைச்சகம் உதவ தயாராக இல்லை. கப்பலை ஏலம் எடுத்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, என்விடெக்கின் கோரிக்கையை நிராகரித்தது.  இதனால், வேறுவழியின்றி மும்பை உயர் நீதிமன்றத்தில் என்விடெக் நிறுவனம் வழக்கு தொடர்ந்து. இதிலும், ஆட்சேபனை இல்லா சான்றிதழை வழங்க முடியாது என பாதுகாப்பு அமைச்சகம்  தெளிவுபடுத்தி இருந்தது.

என்விடெக் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில், ‘கோவா கடற்கரையில் விராட் கப்பலை அருங்காட்சியமாக நிறுத்தும் எங்கள் முயற்சி, தேசியபற்று மிக்கது. ஆனால், பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில்களும், செயல்பாடுகளும் கப்பலை உடைப்பதிலேயே குறியாக இருப்பதை காட்டுகிறது,’’ என குற்றம்சாட்டினர். மேலும், கடைசி கட்ட முயற்சியாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர என்விடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Related Stories: