விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை பதிவு... உங்களுக்கு என்ன... ஜான்சி ராணியினு நெனப்பா? : கங்கனாவை வறுத்தெடுத்த மகளிர் ஆணைய தலைவி

புதுடெல்லி, :விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட கங்கனாவை, டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடுமையாக சாடி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கங்கனா வெளியிட்ட டுவிட்டில், ‘டெல்லி ஷாஹீன் பாக் போராட்டத்தில் (சிஏஏ) பங்கெடுத்த அதே மூதாட்டிதான் இவர்.

இவரைத்தான் டைம் பத்திரிகை இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக குறிப்பிட்டு பாராட்டியிருந்தது. இப்போது விவசாயிகள் போராட்டத்தில் இருக்கிறார். இவர் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள 100 ரூபாய் கொடுங்கள் போதும்’ என்று கூறியிருக்கிறார்.இந்த டுவிட்டால் கடும் கண்டனத்தை எதிர்கொண்ட கங்கனா, பின்னர் அதனை நீக்கிவிட்டார். இருந்தும் அவருக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹக்கம் சிங் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு வயதான பெண் குறித்து கங்கனா அவதூறு கருத்து பதிவிட்டுள்ளார். ஒரு சில படங்களில் நடத்திவிட்டு, டுவிட்டரில் அசிங்கமான கருத்துகளை பதிவிட்டு வரும் அவர் தன்னை சிங்கம் என்றோ, ஜான்சி ராணியாகக் கருதி உள்ளாரா?

இந்த நாட்டின் உண்மையான சிங்கம் கடின உழைப்பாளிகளான பெண்கள்தான். அவர்கள்தான், நாட்டை வளர்த்து, உணவளித்து, எல்லைகளையும் பாதுகாத்து வருகின்றனர். ‘ஒய்’ பிரிவு பாதுகாப்புடன் செல்வதால் அவர் தன்னை ஒரு சிங்கமாக கருதுகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு தைரியம் இருந்தால், ஒரு நாள், வயலில் இறங்கி வேலை செய்யுங்கள். ஒரு நாளாவது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரண பெண்ணாக வெளியே வாருங்கள். ஏழை தொழிலாளியைப் போல் நடந்து கொள்ளுங்கள் பார்ப்போம். நாள் முழுக்க வேலை செய்துவிட்டு, உங்கள் வீட்டு வேலைகளை செய்து காட்டுங்கள்’ என்று காட்டமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>