தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பிஎப்ஐ தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரன்ட் அமைப்பின் தலைவர்களான அப்துல் ரஹ்மான், நசருதின், அஸ்ரப் மவுலவி ஆகிய 3 பேர் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கொச்சியில் உள்ள அப்துல் ரஹ்மான் வீடு, திருவனந்தபுரத்தில் உள்ள அஸ்ரப் மவுலவி வீடு, மலப்புரத்தில் உள்ள நசருதின் வீடு ஆகிய 3 இடங்களில் கொச்சி அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக ஒரே நேரத்தில் புகுந்தனர். மலப்புரத்தில் நசிருதீன் வீட்டில் 2 லேப்டாப்கள் மற்றும் வங்கி பாஸ்புக்குகள் கைப்பற்றப்பட்டன. திருவனந்தபுரத்தில் அஸ்ரப் மவுலவி வீட்டில் நடத்திய சோதனையின்போது பாப்புலர் பிரன்ட் தொண்டர்கள் திரண்டு அமலாக்கத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

3 மணி நேர சோதனைக்கு பின்னர் அதிகாரிகள் வெளியே வந்து ஒன்றும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அதை எழுதி கொடுத்தால் தான் அதிகாரிகளை வெளியே செல்ல அனுமதிப்போம் என்று பாப்புலர் பிரன்ட் கட்சியினர் தெரிவித்தனர். இதையடுத்து, சோதனையில் எந்த ஆவணமும் கிடைக்கவில்லை என்று எழுதி கொடுத்தனர். தமிழகம், கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பணம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: