புரெவி புயல் முன்னெச்சரிக்கை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி-யிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை..!!

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழகத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள புரெவி புயல் நேற்று இரவு இலங்கை கடற்கரையின் திரிகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்தது. தற்போது தமிழக கடற்கரை பகுதியான பாம்பனுக்கு தென்கிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் பாம்பன் பகுதியை நெருங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசி மூலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புகொண்டு ஆலோசித்துள்ளார். அச்சமயம் தமிழகத்தில் எடுக்கப்படவுள்ள புயல் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.

இதையடுத்து, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாரத பிரதமர் மோடி, முதலமைச்சரை தொடர்பு கொண்டு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். நிவர் புயலில் தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக உயிரிழப்பு குறைக்கப்பட்டிருப்பதாகவும், அதனை போலவே புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் மோடி நேற்றைய தினம் தொலைபேசி மூலமாக மோடி கேட்டறிந்தார். இந்நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயார் நிலையில் இருப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

Related Stories: