வந்தா சமாளிப்பீங்களா மக்களே.. டிசம்பர் இறுதியில் கொரோனா 4ம் அலை: வல்லுநர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: தலைநகரில் இந்த மாத இறுதியில் மேலும் ஒரு கொரோனா அலை வீசக்கூடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து, மக்களை உஷாராக இருக்கும்படி எச்சரித்து உள்ளனர். லாக்டவுன் தொடங்கியது முதல் கடந்த மாதம் 10ம் தேதி வரை காணாத அளவில், 3ம் அலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நவம்பர் 11ல் 8,500ஐ தாண்டியும், இறப்பு 100க்கும் அதிகமாகவும் பதிவாகி மக்களை பீதியில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஒரு வாரம் முழுவதும் தினமும் 7,000க்கும் அதிகமாகவே பாதிப்பு பதிவானது. இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் 2ம் முறையாக டெல்லியில் நேரில் களமிறங்கி 11 அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும், சுகாதார உள்கட்டமைப்பு விரிவாக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.

அதன் பிறகு பாதிப்பு படிப்படியாக குறைந்தது. மூன்றாம் அலையின் உச்சகட்டத்தை தாண்டியுள்ளோம். அடுத்த ஓரிரு வாரத்தில் நிலைமை கட்டுக்குள் வரும் என மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா 3ம் அலையின் தாக்கம் ஓயத் தொடங்கி பாதிப்புகள் குறைந்து வருகையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் 4ம் அலைக்கு வாய்ப்பு உள்ளது என வல்லுநர்கள் நம்புகின்றனர். மூன்றாம் கட்ட தாக்கம் குறைந்தது உண்மை தான் என்றும், அதே சமயம் டெல்லியில் இருந்து கொரோனா அலை மாறவில்லை எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.

இதில் பனியின் தாக்கமும் சேரும் என்பதால் பாதிப்பு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. இது குறித்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனை கோவிட்-19 அர்ப்பணிப்பு வார்டு சிறப்பு டாக்டர் அஜீத் ஜெயின் கூறுகையில், ‘‘வயது 70ஐ கடந்தவர்களும், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நீங்காத பல்வேறு உடல் உபாதைகள் உள்ளவர்களும் கொரோனா தொற்றில் அதிகம் சிக்கியிருப்பது புள்ளி விவரங்களில் தெரிகிறது. எனினும் மருத்துவமனைகளில் சிகிச்சை தரமும் குறைவின்றி உள்ளது. அத்தியாவசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலமாக 3ம் அலை இத்துடன் முடிந்ததாக கருதுகிறோம்.

ஒருவேளை அடுத்த அலை வீசினால் அதை எதிர் கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் தயாராக உள்ளோம்’’, எனக் கூறியுள்ளார். இதனிடையே, ‘நிச்சயம் நாம் வெல்வோம்: கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம்’’, எனும் விரைவில் வெளியீட்டு விழா காணவுள்ள நூலாசிரியர், சுகாதார வல்லுநர், தொற்றுநோய் ஆலோசகர் என பன்முகத் திறன் கொண்ட டாக்டர் சந்திரகாந்த் லஹரியா கூறுகையில், ‘‘அலை ஓய்ந்ததாக கருதக்கூடாது. மூன்றாம் அலையின் உச்சகட்டம் எவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதை உணர்ந்து சுகாதார துறை கவனமாக இருக்க வேண்டும். எனவே மீண்டும் ஒரு அலையின் தாக்கம் இருந்தால் அதனை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். கொரோனா தொற்று ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் மக்களை பாதிக்கிறது. அதாவது வானிலை மாற்றங்களில் பரவல் அதிகரிக்கிறது. இப்போது குளிர்காலம் கடுமையாகி வருவதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சமயத்தில் கும்பல் கூடும்போது மீண்டும் ஒரு அலைக்கு வாய்ப்பு உள்ளது’’, என எச்சரித்து உள்ளார்.

* டெல்லியில் புதிதாக 3,944 பேருக்கு தொற்று

டெல்லியில் நேற்று புதிதாக 3,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் டெல்லியில் நேற்று நான்காயிரத்துக்கும் குறைவாக தொற்று பாதிப்பு பதிவானது. இதன்மூலம் நகரில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,78,324 ஆக உயர்ந்தது. மேலும், கோவிட் தொற்றால் 82 பேர் பலியாகினர். இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9,342 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் 78,949 பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 36,370 ஆர்டி பிசிஆர் சோதனைகளும் அடங்கும். நகரில் நேற்று முன்தினம் வரை 30,302 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: