போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : மாஜி முதல்வர் சித்தராமையா ஆலோசனை

பெங்களூரு:விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்து வருகிறது என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா  தெரிவித்தார். பெங்களூரு ஊரக மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா சாதகள்ளி பகுதியில் அமைந்துள்ள தனியார் ரிசார்ட்டில் காங்கிரஸ் முக்கிய  தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சித்தராமையா கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஏ.பி.எம்.சி.,  நிலசீர்த்திருத்த சட்டம், தொழிலாளர்கள் சட்டம் மக்களுக்கு எதிராகவுள்ளது. மத்திய அரசு விவசாயிகளை பள்ளத்தில் தள்ளும் திட்டங்களை கொண்டு  வந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தி வருவது நியயமானது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி  வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளித்துள்ளது.  அதே போல் இவர்களின் போராட்டத்துக்கு மத்திய அரசு மதிப்பளித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த  முயற்சிக்க வேண்டும். இத்துடன் மக்களுக்கு எதிரான சட்டங்களை உடனே கைவிட வேண்டும். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள்  எதற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள  சட்டங்களை மாநிலத்தில் அமல்படுத்துவதற்கு எங்களின் எதிர்ப்பு உள்ளது. நான் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், விவசாயிகளுக்கு ஆதரவாக  இருப்போம் என்றார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

Related Stories: