காப்புறையின் அவசியத்தை கட்டாயம் புரிஞ்சுக்கனும் கட்டுப்பாடா இல்லேன்னா கஷ்டம்தாங்க: டிசம்பர் 1 சர்வதேச எய்ட்ஸ் தினம்

நெல்லை: எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 1988ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி சர்வதேச எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 35 சதவீத எய்ட்ஸ் நோயாளிகள் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாகவே உள்ளனர். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர், தங்களுக்கு அப்படி ஒரு பாதிப்பு இருப்பதே தெரியாத நிலையில்தான் உள்ளனர். 2015ம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரப்படி, உலகளவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 3.5 கோடி பேர் என்றும், இறந்தவர்கள் 11 லட்சம் பேர் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

எய்ட்ஸ் நோய் 86% பாதுகாப்பற்ற உடலுறவின் மூலமும், 4% எச்ஐவி தொற்றுள்ள கர்ப்பிணிகள் மூலமும், 2% சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசியை பயன்படுத்துவதன் மூலமும், 2% பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் மூலமும், மீதி 6% பிற காரணங்களினாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, தசைவலி, வாய் அல்லது பிறப்புறுப்பு புண், திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு, நனைக்கும் இரவு வியர்வை, தோல் அரிப்பு, மங்கலான பார்வை போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக உள்ளது. எச்ஐவி பாதிப்பு இருப்பவர்களோடு இணைந்து பணியாற்றுவது, அவர்களை தொடுதல், கைகுலுக்குதல் போன்றவற்றால் எச்ஐவி பரவுவதில்லை. எய்ட்ஸ் நோயின் ஆபத்துகளை தவிர்க்க உடலுறவின்போது காப்புறை பயன்படுத்துவது அவசியம். ஒருவருக்கு பயன்படுத்திய ஊசி, சிரிஞ்சுகளை மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது.

அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகள் மூலம் மட்டுமே ரத்த மாற்றம் செய்ய வேண்டும். பாலியல் தொழிலாளிகள், அவர்களுடைய இணையர்கள், நரம்பு வழியே போதையேற்றும் பழக்கமுடையவர்கள், கனரக வாகன ஓட்டுநர்கள், இடம்பெயரும் தொழிலாளிகள், அகதிகள், கைதிகள் போன்றவர்களுக்கு இத்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதுபோன்ற நபர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை எச்ஐவி பரிசோதனை செய்வது நல்லது. எச்ஐவி தொற்றுக்கு கொடுக்கப்படும் ஆன்டிரெட்ரோவைரல் தெரபியின் மூலம் இந்த வைரசைக் கட்டுப்படுத்தி பரவாமல் தடுக்க முடியும். எய்ட்ஸ் ேநாய் குறித்த ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு அரசின் இலவச உதவி எண்ணான 1097ஐ அழைத்து உரிய உதவியைப் பெறலாம்.

Related Stories: