உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்; 4 பேரின் உயிரை காக்க தாமதமாக புறப்பட்ட விமானம்: ஜெய்ப்பூர் முதல் டெல்லி வரை பரபரப்பு

புதுடெல்லி: தனது உடல் உறுப்புகள் தானம் செய்த ராஜஸ்தான் பெண்ணின் முக்கிய உறுப்புகளை எடுத்து செல்வதற்காக, ஜெய்ப்பூரில் இருந்து விமானம் தாமதமாக புறப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்து இறந்த 48 வயதான பெண்ணின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் ஆகிய உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக பாதிக்கப்பட்ட டெல்லி மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ஜெய்ப்பூரில் இருந்து டெல்லி மருத்துவமனைக்கு உடலுறுப்புகளை எடுத்து செல்ல ஏர் இந்தியா விமான நிறுவனத்துடன் பேசப்பட்டது.

டெல்லி புறப்பட தயார் நிலையில் இருந்த ஏர் இந்தியா விமானம், உடனடியாக நிறுத்தப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் இருந்து அந்த பெண்ணின் உடலுறுப்புகள் விமான நிலையத்துக்கு எடுத்து செல்லப்பட்டன. சுமார் 30 நிமிடங்களில், மருத்துவ குழுவினர் துணை மருத்துவ ஊழியர்களுடன்  நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை விமானத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9.28 மணிக்கு  விமானம் புறப்பட்டது. அவை டெல்லிக்கு உரிய நேரத்தில் கொண்டு ேசர்க்கப்பட்டன. இந்த அவசர சேவையால் ஏர் இந்தியா விமானம் வழக்கமாக புறப்படும் நேரத்திற்கு மாற்றாக 15 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது.

இதுகுறித்து ஏர் லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்பிரீத் சிங் கூறுகையில், ‘4 பேரின் உயிரை காக்கும் பணியில், எங்களது விமானம் செயல்பட்டதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த அவசர சேவை பணியில் ஏர் இந்தியாவின் பங்கு இருப்பது எங்களுக்கு உண்மையில் சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது. வணிக மற்றும் சமூகப் பொறுப்பை பூர்த்தி செய்யும் போது, திறமையான செயல்பாட்டின் மூலம் மாநிலங்களிடையே பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதே எங்கள் நோக்கம்’ என்றார்.

Related Stories: