மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பலனளிக்க துவங்கியுள்ளன: மன் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: வேளாண் துறையில் சமீபத்தில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கான புதிய வாய்ப்புக்களை வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி மூலமாக வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கம். அதன்படி, நேற்று அவர் வானொலியில் உரையாற்றினார். கடந்த ஒரு வாரமாக வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப் விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றதோடு, அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமரின் உரையில், இப்பிரச்னை பற்றிய கருத்துகள் அதிகளவில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சமீபத்தில், வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புக்களுக்கான கதவுகளை திறந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளால் நிறைவேற்றுவதாக கூறி ஏமாற்றி வந்த விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை, தற்போதைய மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விரிவான விவாதங்களுக்குப் பிறகுதான், வேளாண் சீர்திருத்த சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் விவசாயிகளின் கால் விலங்கை உடைத்துள்ளதோடு, அவர்களுக்கான புதிய உரிமைகளையும், வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளது.

இந்த உரிமைகள், விவசாயிகளுக்கான பிரச்னைகளை மிகக் குறுகிய காலத்தல் குறைக்க தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி நடந்து கொள்ளாத வர்த்தகரிடம் இருந்து, இச்சட்டங்களை பயன்படுத்தி பணத்தை வசூலித்து பயன் அடைந்துள்ளார். நாளை (இன்று) குருநானக் தேவின் பிறந்த நாளாகும். அவரது உன்னதமான கொள்கைகள் பாராட்டுக்குரியவை. சீக்கிய குருக்கள் மற்றும் குருத்வாரா தொடர்பான பல்வேறு பணிகளில் நான் ஈடுபட்டதால் என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன். கடந்த ஆண்டு திறக்கப்பட்ட கர்தார்ப்பூர் வழித்தடம் வரலாற்று சிறப்பு மிக்கது.

பறவையியலாளர் மற்றும் இயற்கை ஆர்வலான டாக்டர் சலீமின் பணி நினைவுக் கூரத்தக்கது. பறவைகளை கண்காணிப்பதில் ஆர்வமுள்ள பல்வேறு அமைப்புக்கள், சங்கங்கள் இருக்கின்றன. நீங்கள் அனைவரும் பறவைகளை குறித்து மேலும் கண்டுபிடிப்பீர்கள் என நம்புகிறேன். இந்தியாவின் கலாசாரமானது உலகம் முழுவதும் பிரபலடைந்து வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோனாஸ் மாசெட்டி, நமது வேதங்களையும் கீதையையும் அங்குள்ள மக்களிடையே பிரபலப்படுத்தி வருகிறார். நியூசிலாந்தின் ஹமில்டன் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி எம்பி கவுரவ் சர்மா சமஸ்கிருதத்தில் பதவியேற்றது பாராட்டுக்குரியது. இவ்வாறு மோடி பேசினார்.

* அன்னபூரணி சிலை மீட்பு

மோடி தனது உரையில் மேலும், ‘‘இந்தியாவின் மிகப் பழமையாக அன்னபூரணி சிலை, கனடாவில் இருந்து மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது, 1913ம் ஆண்டு வாரணாசியில் இருந்து கடத்தப்பட்டது. தற்போது மீட்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது,’’ என்றார்.

* தடுப்பூசி நிறுவனங்களுடன் இன்று ஆலோசனை

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் முயற்சியில் ஜென்னோவா பயோபார்மா, பயோலாஜிக்கல் இ மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவற்றின் ஆய்வுகள் நடக்கும் மையங்களுக்கு பிரதமர் மோடி நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து 3 நிறுவனங்களின் குழுவினருடன் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவது குறித்த தேதிகள் முடிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: