மழைநீர் வடிகால்வாய் அமைத்தால் இசிஆர் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கும் ஆபத்து: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: மழைநீர் வடிகால்வாய் அமைத்தால் இசிஆர் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கும். எனவே அரசு பணத்தை வீணாக்காமல் சென்னையில் மழைநீர் தேங்கி உள்ள இடங்களில் இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இத்திட்டத்தை செயல்படுத்த அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பருவமழை காலங்களில் சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. வர்தா புயல் முதல் நிவர் புயல் வரை இந்த நிலையை முடிச்சூர், சென்னையின் தாழ்வான பகுதிகள், சோழிங்கநல்லூர் உள்பட பல பகுதிகளில் இது ஆண்டுதோறும் நடந்து வருகிறது. எனவே மழைநீர் தேங்காத வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் இத்திட்டம் 2016ம் ஆண்டு ரூ.4,034 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.  அதில் கோவளம் வடிகால் திட்டத்தில் 306 கி.மீ., தூரத்துக்கு ரூ.1243 கோடி செலவில் அமைக்கப்பட்டது. தற்போது 3வது கட்டமாக பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூர், கானத்தூர் மற்றும் உத்தண்டி ஆகிய பகுதிகளில் ரூ.270.83 கோடி செலவில் 52 கி.மீ., மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவற்றில் 3வது கட்ட திட்டம் கிழக்கு கடற்கரை பகுதிக்குள் வருகிறது.

மணல் பரப்பு நிறைந்த பகுதி என்பதால் கன மழை பெய்தாலும் அது இப்பகுதியில் உடனடியாக வடியும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அரசு பணம் 270 கோடியை மழைநீர் தேங்கி உள்ள பகுதியில் பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் வலியுறுத்தலாக உள்ளது. இதுகுறித்து, இசிஆர் பகுதியை சேர்ந்த இத்திட்ட எதிர்ப்பு குழுவை சேர்ந்த பெண் ஒருவர் கூறியதாவது: இசிஆர் பகுதிகளான பாலவாக்கம் முதல் உத்தண்டி வரை மழைநீர் வடிகால்வாய் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். கடற்கரை மணல் பரப்பு நிறைந்த பகுதி என்பதால் இங்கு மழைநீர் தேங்காது. உடனடியாக வடிந்து விடும். இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. ஆனால் மாநகராட்சி வடிகால்களை கட்டினால், மழைநீர் வடிகால்வாய் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு சென்றுவிடும். இதன் மூலம் இசிஆரில் நிலத்தடி நீர் முற்றிலுமாக பாதிக்கும். தற்போது இந்த பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமே, ஆழ்துளை கிணறுகள் தான். காரணம், இப்பகுதியில் இதுவரை குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கவில்லை.

நிலத்தடி நீர்மட்டம் குறைந்தால் அதற்கும் வழியில்லாமல் போய்விடும். குறிப்பாக கடந்த வாரம் பெய்த  மழையால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில் மழைநீர்  இன்னும் தேங்கி கிடக்கிறது. மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாத இடங்களில்  தண்ணீர் தேங்கவில்லை. எனவே இத்திட்டத்தை சென்னையில் மழைநீர் தேங்கும்  பகுதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். கோடை காலங்களில் கடுமையான தண்ணீர் பிரச்னையை சந்திக்க வேண்டும். அதனால் தான் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு இப்பகுதியை சேர்ந்த பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மக்களின் அடிப்படை தேவையான குடிநீர், கழிவுநீர் இணைப்பை மாநகராட்சி செயல்படுத்தவில்லை.  இது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அமைக்கப்பட்டுள்ள குழுவானது டிசம்பர் 4ம்தேதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. ஆனாலும் பணிகளுக்கு தடையில்லை என்று கூறி மாநகராட்சி இப்பணிகளை விரைவுபடுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>