கும்பல் தாக்குதலை சமாளிக்க தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய போலீஸ்காரர்

புதுடெல்லி: கார் பார்க்கிங் செய்வது தொடர்பான புகாரை விசாரிக்க சென்றபோது உள்ளூர்வாசிகளால் தாக்கப்பட்ட கான்ஸ்டபிள் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகினி பகுதியில் வசிக்கும் முதியோர் தம்பதிக்கும், அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே காரை பார்க்கிங் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதுபற்றி போலீசில் முதியோர் தம்பதி புகார் அளித்தனர். இதனை விசாரிப்பதற்காக கான்ஸ்டபிள் புனித் சர்மா என்பவர் அங்கு சென்று விசாரித்தார். அப்போது, முதியோர் தம்பதி வசிக்கும் அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்தில் வசிக்கும் தம்பதி கான்ஸ்டபிளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவ்வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்ட காரை அப்புறப்படுத்த கோரியதை ஏற்காமல், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து வரவழைத்து சர்மாவிடம் தகராறு செய்தனர்.

ஒருகட்டத்தில் அவர்கள் சர்மாவை தாக்கியததால், தற்காப்பு கருதி சர்வீஸ் பிஸ்டலை எடுத்து தரையில் நான்கு ரவுண்டு சுட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல், சர்மாவிடம் இருந்த துப்பாக்கி, செல்ேபான், கார் சாவி ஆகியவற்றை பறிக்க முயன்றனர். இந்த களேபரத்தில் சர்மா சுட்டதில் பெண் ஒருவரின் காலில் குண்டுபாய்ந்தது. இதையடுத்த அவர் அவசரமாக அருகிலுள்ள பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சர்மாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ விசாரணையில் அவர் மது அருந்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. மேலும், அரசு ஊரியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கும்பல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக துணை கமிஷனர் ஆர்கே சிங் கூறினார்.

Related Stories: