திருமணத்திற்கு சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கிய மணப்பெண்

ஷிவமொக்கா: தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்த மணப்பெண் ஒருவர், திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.1 லட்சத்தை தான் படித்த அரசு பள்ளிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி தாலுகா, ஹொன்னகூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மனசகாரு கிராமத்தில் வசிக்கும் டிசகப்பா-ஹேமாவதி தம்பதியரின் மகள் சேத்தனா. மனோதத்துவத்தின் முனைவர் பட்டம் முடித்துள்ள அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் மைசூருவை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கும் இரு குடும்பத்தினர் பேசி திருமணம் முடிவு செய்தனர். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று மைசூரு மாவட்டத்தில் மிகவும் எளிமையாக நடந்தது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்த சேத்தனா. திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நல்ல தேவைக்கு பயன்படுத்த முடிவுசெய்தார். தான் ஆரம்ப கல்வி பயின்ற குடேசேரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியின் மேம்பாட்டிற்காக  கொடுக்க முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் தலைமை ஆசிரியரை நேரில் சந்தித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். சேத்தனாவின் செயலுக்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: