ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1.42 லட்சம் மணல் மூட்டைகள் தயார்: நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணி தீவிரம்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்காக 83 இடங்களில் 1,42,998 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் நிவர் புயலை எதிர்கொள்ள முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளின் அடிப்படையில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக 195 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் இந்தாண்டு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்பகுதியில் பேரிடர் மேலாண்மை குழுக்கள், அரசு அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். பருவமழை பாதிப்புகளை தவிர்க்க மாவட்ட அளவில் ஒரு குழுவும், ஒவ்வொரு வருவாய் கோட்டங்களுக்கும் ஒரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலை அலுவலரும், ஒவ்வொரு வட்டங்களுக்கும் ஒரு துணை ஆட்சியர் நிலை அலுவலரும், மாவட்டத்தில் உள்ள 50 சரகங்களுக்கும் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை அலுவலர்களும் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்புகளின்போது பொதுமக்களை தங்க வைப்பதற்கு ஏதுவாக 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 251 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை மூலம் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, பாபநாசம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர் அடங்கிய 80 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகு, மரம் அறுவை கருவி, கயிறு, மண்வெட்டி, பாதுகாப்பு உடைகள் என அனைத்து மீட்பு பொருட்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.மேலும் 349 பாலங்கள், 5,258 சிறு பாலங்கள் ஆகியவற்றில் சேதம் ஏற்படாமல் தடுக்க 9,560 மணல் மூட்டைகள், 4,170 சவுக்கு குச்சிகள், 76 தடுப்பு கட்டைகள், 43 மரம் அறுக்கும் இயந்திரம், 23 லாரிகள், 21 டிராக்டர்கள், 23 பொக்லைன் இயந்திரங்கள், 15 புல்டோசர்கள், 8 மோட்டார் பம்ப்ஷெட், 7 ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 பாலங்கள், 10,135 சிறு பாலங்களில் வடகிழக்கு பருவமழையின்போது நீர் தேங்காமல் செல்லும் வகையில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பேரிடரால் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1,42,998 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் களப்பணிகளின்போது உதவி செய்வதற்காக 2,398 முதல்நிலை கடமையாற்றுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

பேரிடர் பாதிப்புகளை தெரிவிக்க 1077

தஞ்சை கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, கனமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான அரசின் எச்சரிக்கைகளை அறிந்து கொள்வதற்கு டிஎன் ஸ்மார்ட் என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பேரிடர்கள் தொடர்பான பாதிப்புகள் மற்றும் புகார்களை கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலங்களில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 மற்றும் 9345336838 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.

மாநில பேரிடர் மீட்புக்குழுவினர்80 பேர் தஞ்சைக்கு வருகை

நிவர் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு சென்று அங்குள்ளவர்களை மீட்க ஏதுவாக சென்னையில் இருந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 80 பேர் தஞ்சை ஆயுதப்படை மைதானத்துக்கு வருகை தந்தனர்.அவர்களோடு தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையினர் 114 பேரும், உள்ளூர் போலீசார் 50 பேரும் என 8 குழுவாக பிரிக்கப்பட்டனர். இவர்கள் வல்லம், திருவையாறு, தஞ்சை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய காவல் உட்கோட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்களோடு மண்வெட்டி, கடப்பாரை, கயிறு, ரப்பர் படகுகள், காஸ் லைட்டுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஸ்டெச்சர்கள், அரிவாள் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களை எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் அனுப்பி வைத்தார்.

அப்போது எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறியதாவது: நிவர் புயலால் எந்த ஒரு உயிரிழப்பும், உடமைகள் இழப்பும் ஏற்படக்கூடாது, போலீசார் பொதுமக்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகளை தேவைப்படும் பட்சத்தில் வீடியோ, புகைப்படமாக எடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். உங்களது பணிகளை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு உயர் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வருவர்.தாங்கள் பணியாற்றக்கூடிய பகுதிக்கு சென்றதும் அங்கு கடந்த காலங்களில் பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியை உடனடியாக சென்று பார்வையிட வேண்டும். மேலும் நிவாரண முகாம்களையும் பார்வையிட்டு அதற்கேற்றார்போல் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பொதுமக்கள் பயப்பட தேவையில்லை

தஞ்சை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பையன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிவர் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மாவட்ட கண்காணிப்பாளர் என்ற முறையில் ஆய்வு செய்தபோது அனைத்து முன்னேற்பாடு பணிகளும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பாதிப்புக்கு உள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தேவையான முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளன.மாவட்ட அளவில் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் தேவையான மீட்பு பொருட்களுடன் தமிழக பேரிடர் குழுவினர் மாவட்டம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுமக்கள், விவசாயிகள் எதற்காகவும் பயப்பட தேவையில்லை. மழை, புயலால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட 251 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும் தகவல்களை மட்டும் அறிந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். மேலும் தகவல், புகார், உதவி வேண்டுவோர் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டை அறை தொலைபேசி எண்.1077 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார். கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: