ஏற்கனவே 3 விரல்களை இழந்த நிலையில் 4வது விரலை வெட்டி நேர்த்திக்கடன்: நிதிஷ்குமார் ஆதரவாளரின் ஆர்வக்கோளாறு

பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் முதல்வரானதால் ஏற்கனவே 3 விரல்களை இழந்த நிலையில், தனது 4வது விரலை வெட்டி ஒருவர் நேர்த்திக் கடன் செலுத்தி உள்ளார். பீகார் மாநிலம் ஜெஹனாபாத் அடுத்த வைனா கிராமத்தைச் சேர்ந்தவர் அனில் சர்மா என்கிற அலி பாபா   (45). இவர் முதல்வர் நிதிஷ்குமாரின் தீவிரமான ஆதரவாளர். ஒவ்வொரு முறையும் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்கும் போதும், அனில் சர்மா வணங்கும் கோரையா பாபா கோயிலுக்கு சென்று தனது கை விரல் ஒன்றை வெட்டி நேர்த்திக் கடன் காணிக்கையாக வழங்கி வந்துள்ளார். நிதிஷ் குமார் 3 முறை முதல்வராக பதவியேற்ற அடுத்த நாள் தனது நேர்த்திக்கடனை செலுத்தி வந்தார்.

அதன்படி நிதிஷ்குமார் 3 முறை பதவியேற்ற பின் தனது மூன்று விரல்களை வெட்டினார். தற்போது 4வது முறையாக கடந்த 16ம் தேதி நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்ற பிறகு, அவர் மீண்டும் தனது 4வது விரலை கோரையா பாபா கோயிலுக்கு ெசன்று வெட்டி நேர்த்திக் கடனாக அளித்தார். அனில் சர்மாவின் இந்த ஆர்வக் கோளாறு பல ஆண்டுகளாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும், அனில் சர்மாவின் இந்த ஆர்வத்தைக் கண்டு தொகுதி மக்கள் ஆச்சரியமடைகின்றனர். இதுகுறித்து அனில் சர்மா கூறுகையில், ‘நிதிஷ் குமாருக்காக நேர்த்தக் கடன் செய்வதால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

பீகார் முதல்வரின் அரியணையில் நிதிஷ் குமார் அமர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. இந்த முறையும் கோரையா பாபாவின் அருளால் நிதிஷ் குமார் 4வது முறையாக முதல்வராக பதவியேற்றார். எனது வேண்டுதல் பலித்ததால் எனது 4வது விரலை வெட்டி கோரையா பாபாவுக்கு நேர்த்திக் கடனாக வழங்கினேன்’ என்றார்.

Related Stories: