பேராவூரணி அருகே பார்வை பாதிக்கப்பட்ட மாணவிக்கு கலெக்டர் நிதியுதவி

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் ஊராட்சி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பெத்தபெருமாள். தேங்காய் உரிக்கும் கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா. மாற்றுத்திறனாளி. இவர்களுக்கு காளிதாஸ் (14) என்ற மகனும், கார்த்திகா(12) என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து பெத்தபெருமாள் இறந்துவிட்டார். இவரது மனைவி அமுதா அண்மையில்  இறந்துவிட்டார். பெற்றோரை இழந்த  இருவரையும் பாட்டி சுந்தராம்பாள் (60)கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார். சித்துக்காடு உயர்நிலைப்பள்ளியில் கார்த்திகா 7ம் வகுப்பும், காளிதாஸ் 10 ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

கார்த்திகா சிறுமியாக இருந்தபோது வெறிநாய் கடித்ததில் ஒரு கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது.  சிகிச்சை அளித்து பார்வை கிடைத்த நிலையில், தற்போது மற்றொரு கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. இந்த தகவலறிந்த கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செளந்தரராஜன் ஏற்ப்பாட்டில் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவருக்கு பார்வை குறைபாடு நீங்கியுள்ளது. இந்நிலையில் தாய் தந்தையை இழந்த அவர்களது ஏழ்மை நிலையை அறிந்த கலெக்டர் கோவிந்தராவ் தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

அதற்கான காசோலையை பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று வழங்கினார். கலெக்டரின் மனிதாபிமான செயலுக்கு கார்த்திகாவும், கிராமத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: